Monday, 21 December 2009

யாழ் நூலகக் கட்டடம், யாழ்ப்பாணம்.

சும்மாயிருக்கும் நேரங்களில் ஏதாவது புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் பள்ளிக்கூட நாள்முதல் என்னுடன் இருந்து வருகிறது. ஹாட்லிக் கல்லூரியின் கயவர்களினால் அழிக்கப்பட்டதன் பின் சேகரிக்கப்பட்ட புத்தகங்ககளைக் கொண்டு மீள உருவாக்கப்பட்ட சிறு நூலகமும், பள்ளிக்கூடம் மற்றும் ரியூசன் வகுப்புகளிற்கு செல்லும் வழியிலிருந்த சதாவதானி கதிரைவேற்பிள்ளை சனசமூக நிலையமும், போரூட் தொண்டு நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட நூலகமும், மந்திகையில் இருந்த பொது நூலகமும் எனது முக்கிய பொழுதுபோக்கிடங்களாக இருந்தன.


அன்றிலிருந்து நூலகங்களைக் கண்டால் ஒருமுறை உள்ளே போய்ப் பார்ப்பது எனது வழமை. ஆனாலும் யாழ்ப்பாணத்தின் அறிவுத்தேடலின் சாட்சியாகவிருந்து கயவர்களினால் அழிக்கப்பட்டதன் பின் வெளியுலகத்திற்கு கண் துடைப்பதற்காக வெள்ளையடிக்கப்பட்ட வெற்றுக் கூடாகவிருக்கும் யாழ் நூலகக் கட்டடம் ஏனோ என்னை உள்ளே ஈர்க்கத் தவறியது.

Wednesday, 16 December 2009

முறிகண்டிப் பிள்ளையார் கோவில், வன்னி

முறிகண்டிப் பிள்ளையார் கோவில்

நீண்ட பயணங்கள் தடங்கல்களின்றி அமையவும் போகின்ற காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறவும் கடவுளை வேண்டிக்கொள்வது நீண்ட காலமாக தமிழர்களிடம் இருந்துவரும் பழக்கமாகும். அவ்வாறான வழிபாட்டிற்கு இலங்கையின் வடபகுதியான வன்னியின் மிகவும் பிரசித்தமான கோவில்களிலொன்றுதான் முறிகண்டிப் பிள்ளையார் கோவில். வடபகுதியின் பிரதான நெடுஞ்சாலையான யாழ்-கண்டி A9 வீதியில் கிடுகினால் வேயப்பட்ட மிகவும் எளிமையான அக்கோவில் அவ்வழியால் செல்லும் அனைவரும் தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தி வழிபட்டுச் செல்லும் ஒரு தலமாகும். 2008 வரை கோவிலும் அதன் சுற்றாடலில் இருக்கும் சிற்றுண்டிச்சாலைகளும் எப்பொழுதும் கலகலப்பாக சனக்கூட்டம் நிறைந்து காணப்படும்.

Wednesday, 9 December 2009

நிலாவரைக் கிணறு, நவக்கிரி

சின்ன வயதில் நிலாவரைக் கிணற்றின் இதுவரை அறியப்படாத மிகப்பெரும் ஆழம் பற்றியும் அக்கிணற்றிலிருந்து சில கிலோமேட்டர் தூரம்வரை நீர்ப்பாசனம் செய்யப்படும் வாழைத்தோட்டங்கள் பற்றியும் கேள்விப்பட்டதிலிருந்து எங்களூரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் போகும்போதெல்லாம் நிலாவரைக் கிணறு இருக்கும் நவக்கிரி வழியாகப் போகும்படி பலமுறை நச்சச்சரித்திருக்கிறேன். அவ்வாறே பலமுறை போயுமிருக்கிறேன்.

முறையான சுற்றுச்சுவர்கள் இல்லாது பார்ப்பதற்கு பாழடைந்த கேணி போலிருக்கும் அந்தக்கிணற்றின் அடி கண்ணுக்குத் தெரியாது இருண்டு கிடக்கும். அதன் ஆழத்தை உணர்வதற்காகவேன்றே கையில் எடுத்துச் செல்லும் அலுமினியத்திலான 1,2,5 அல்லது 10 சத நாணயக்குற்றிகளை அக்கிணற்றினுள் போட்டுவிட்டு அவை ஆடியாடி நீண்ட நேரமாக அமிழ்ந்து கண்ணுக்குத்தெரியாது போவதைப் பார்த்து இரசிப்பது அலாதியான ஒரு அனுபவம்.

நிலாவரைக் கிணறு, நவக்கிரி

யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு நீர்வளமான நிலத்தடி நீரை தேக்கிநிற்கும் சுண்ணாம்புக்கல் பாறைத்தொடரில் உள்ள மிகப்பிரமாண்டமான கோறையின் மேற்பக்கத் துவாரமாகக் கருதப்படும் இக்கிணற்றின் ஆழத்தை ஆங்கிலேயர் காலத்தில் அளவிட எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன என்று கூறப்படுகின்றது. சோனார் (SONAR) போன்ற நவீன தொழினுட்பங்கள் மூலம் ஆழத்தை அளவிடுவதற்கான முயற்சிகள் இதுவரையும் எடுக்கப்படாததனால் "ஆழமறியாக் கிணறு" என்ற பெயரும் நிலா வரையான தூரத்தினை ஆழமாகக் கொண்ட கிணறு எனப்பொருள்படும் "நிலாவரைக் கிணறு" என்ற பெயரும் மிகப்பெரும் நீர்முதல் காரணமான "வற்றாத கிணறு" என்ற பெயரும் இன்றுவரை தொடர்கின்றன.

மேலும் இந்தகிணற்றின் அறியப்படாத ஆழத்தை மையமாகக்கொண்டு "நிலாவரைக் கிணற்றில் எலுமிச்சம் பழம் போட்டால் அது கீரிமலைக் கேணியில் வெளிவரும்" என்ற கட்டுக்கதை இன்றும் பேசப்படுகின்றது. சுண்ணாம்புக்கல் பாறைத்தொடரில் மேல் தேங்கிநிற்கும் நிலத்தடி நீரில் தொடர்பு இருப்பது சாத்தியமென்றாலும் எலுமிச்சம் பழம் நவக்கிரியிலிருந்து கீரிமலைக்கு செல்வது என்பது சாத்தியமற்ற ஒன்று. கீரிமலைக் கேணியில் பிதிர்க்கடனை முடிக்க வருபவர்கள் போட்டிருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தைப் பார்த்து அது நவக்கிரியிலிருந்து தானாக சுழியோடி வந்தது என்று யாரோ கிளப்பிவிட்ட புரளி இன்றுவரைதொடர்கிறது.

பிற்குறிப்பு:
இதேபோன்ற இன்னுமொரு கட்டுக்கதைதான் தம்பசிட்டியிலுள்ள மாயக்கைப் பிள்ளையார் கோவில் கிணற்றில் எலுமிச்சம் பழம் போட்டால் அது தொண்டைமானாற்றில் வெளிவரும் என்பதும். அந்தக்காலத்தில் மந்திர தந்திர வேலைகளைச் செய்பவர்கள் எல்லோரும் அதிகம் எலுமிச்சம் பழங்களைப் பயன்படுத்தியதால் எலுமிச்சம் பழத்திற்கு சுழியோடுதல் உட்பட நிறைய சக்திகள் இருக்கும் என்று நம்பியிருப்பார்களோ தெரியவில்லை.

வியாபாரிமூலை: சில தசாப்தங்களுக்கு முன்

இலங்கைத்தீவின் வடமுனையாக விளங்கும் பருத்தித்துறையிலிருந்து மேற்காக காங்கேசன்துறை நோக்கி நீளும் கடற்கரையோர வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்று மாலிசந்தி நோக்கி கிளைவிடும் தார்வீதியில் திரும்ப வருவது வியாபாரிமூலையெனும் அமைதியான கிராமம். கடற்கரையிலிருந்து வீரபத்திரர் கோவில் வளைவு வரை வீதியின் இருமருங்கும் கிளைவிடும் சிறு சிறு ஒழுங்கைகளும் வீதிகளும், அங்கு வசிக்கும் அனைவருக்குமிடையிலான உறவுமுறைகளும், வியாபாரிமூலையெனும் கிராமத்தினை ஒருங்கிணைக்கும். ஆலய மணியோசைகள் துயிலெழுப்பும், உப்புக்காற்று இதமாய் வீசும்.

சித்தி விநாயகர் கோவில்

கிராமத்தின் ஒவ்வொரு குறிச்சியும் (சிறு பகுதிகளும்) தனித்துவமான பெயர்களைக்கொண்டது. வெள்ளையற்றணி, சிப்பிமணலடி, பெயர்ந்த ஆலடி, விராவளை, சின்னக்கிளானை, பெரியகிளானை, வாரியார்வளவு, கம்பளியப்பான், பலாப்பத்தை என்று பல்வேறுபட்ட காரணப்பெயர்களுடன் நீளும் குறிச்சிகளின் பட்டியல். அநேகமாக குடும்பப்பெயர்களுடன் குறிச்சிகளின் பெயர்களும் சேர்ந்தே பலரையும் இனங்காண உதவும். சில பத்தாண்டுகளிற்கு முன்னர் ஒரே பெயரை பலருக்கும் வைத்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் இவ்வாறே தீர்க்கப்பட்டன. இதேபோல ஒருவருக்கு இரண்டு (அதற்குமேலும் கூட) பெயர்களுமிருக்கும். தந்தைவழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் தாய்வழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் என்று பெயர்களை வைத்து எல்லாரையும் திருப்திப்படுத்தினார்கள். அதனால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களிற்காக சத்தியக்கடதாசிகளிற்காக பலரும் அலைந்தது வேறு கதை.

குறிச்சிப்பெயர்களை விட அடைமொழிகளும், பட்டப்பெயர்களும் கூட பலரை குறிப்பிட உதவின. சக்கடத்தார், மனேச்சர், சவுடால், ஹொல்டோன் (hold-on), முயல், அதாவது (எப்பொழுதும் 'அதாவது' என்று கதைக்கத்தொடங்கும்) போன்ற அடைமொழிகளும் கருமுனி, குறுமுனி, சருகுமுனி போன்ற பட்டப்பெயர்களும் பிரபலமாக இருந்தன.

பதினைந்து அடி உயரமான கோட்டைச்சுவர் போன்ற கற்சுவர்களுடனும் மிகப்பெரிய வாயிற்கதவுகளுடனும் பளிங்குக்கல் பதித்த தரைகளுடனும் எஞ்சியிருக்கும் சில சுண்ணாம்புக் கட்டடங்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்த கிராமத்தின் பணக்கார குடும்பங்களின் கதைகள் சொல்லும். இலங்கைத்தீவின் வடமுனையிலிருந்து தென்முனைவரை வியாபாரத்தில் முத்திரை பதித்த அந்தக் குடும்பங்கள் தேடிய செல்வத்தின் அளவு அந்த வீடுகளில் காணப்படும் தரையுடன் சேர்த்துக்கட்டப்பட்ட பெரிய இரும்புப்பெட்டகங்களில் தெரியும். இப்படியாக வியாபாரிகளின் கையோங்கியிருந்த கிராமத்திற்கு வியாபரிமூலையென்ற பெயர் வைத்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

இன்றைக்கு 50 ஆண்டுகளிற்கு முன்னர், பெற்றோர்கள் தங்கள் ஆண்பிள்ளைகளை சிறுவயதில் வியாபாரம் செய்யும் உறவினர்களுடன் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் வியாபார நுணுக்கங்கள் பழகும்வரை நீண்டகாலம் ஊதியமில்லாது வேலைசெய்வார்கள். பின்னர் அந்த முதலாளி (உறவினர்) மற்றும் பெற்றோரின் உதவியுடன் சொந்தமாக வியாபாரம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இப்படி அநுபவத்துடன் வியாபாரம் தொடங்குவதால் அநேகம் பேர் தங்கள் தொழிலில் நட்டமடைவதில்லை. இன்றுகூட சில குடும்பங்களில் இந்தவழக்கம் தொடர்கிறது.

வியாபாரம் செய்பவர்கள் தவிர்ந்த ஏனையோர் விவசாயம் செய்பவர்களாக இருந்தார்கள். ஊரின் வடக்காக கடற்கரையோரமாக இருந்த வளங்குறைந்த தோட்டநிலங்களில் உழைப்பை உரமாகவும் வியர்வையை நீராகவும் பாய்ச்சி குரக்கன், தினை, மரவள்ளி, காய்கறிகள் என்று பயிர்செய்தார்கள். துலா ஓடி நீரிறைத்த அந்த நாட்களின் எச்சங்களாக ஆடுகால்களிற்கு நடப்பட்ட சில பூவரச மரங்கள் இன்றும் அந்த தோட்டக்கிணறுகளிற்கருகில் தனித்து நிற்கின்றன. விஞ்ஞானத்தைப் பாடமாகப் படிக்காத அந்தக்காலத்திலும் மழைநீரை சேமிக்கக் குளங்கள் இருந்தன. கடலிற்கருகில் இருப்பதால் கடல்நீர் உட்புகுவதைத்தடுக்க (நிலத்தடி நன்னீருடன் கலப்பதைத் தடுக்க) ஒற்றுமையாக சரியான நேர இடைவெளியில் நீரிறைத்தார்கள். மழைபெய்த அளவிற்கேற்ப பயிர் நட்டார்கள்.

வீதிகளில் ஆவுரோஞ்சிக்கற்களும் (ஆடு, மாடுகள் தங்கள் உடம்புகளை உரசிக்கொள்ள), சுமைதாங்கிகற்களும் (தலையில் சுமையுடன் செல்பவர்கள் அவற்றை இறக்கிவைத்து இளைப்பாற), குடிநீர்ப்பானைகளும் இருந்தன.

சித்தி விநாயகர் ஆலயத் தேர்

ஆன்மிகம் வளர்க்க ஊரின் நான்கு திசைகளிலும் கோயில்களும் அவற்றுடன் ஒன்றிவாழும் பண்புமிருந்தன. கோயில்களில் சைவக்குருக்கள் பூசைகள் செய்தனர். வேற்றூர்களில் வியாபாரம் செய்பவர்கள் கோவில் திருவிழாக்காலங்களில் ஊர்திரும்புவர். இயற்கை கற்பூரம் விளைந்த சித்தி விநாயகர் ஆலயமும், வீரபத்திரர் ஆலயமும், சித்திராபௌர்ணமியில் இராப்பொங்கல் நடக்கும் நாச்சிமார் கோவிலும், அருளம்பல சுவாமிகளின் (மகாகவி பாரதியாரின் குரு) சமாதியும், காலனித்துவ ஆட்சியில் கல்விக்காக மதம்மாறுவதைத் தடுக்க ஆரம்பித்த சைவப்பிரகாச வித்தியாசாலையும் ஊர்மக்களின் ஆன்மீக ஈடுபாட்டிற்கு சான்றுகளாயுள்ளன.

சித்தி விநாயகர் ஆலயத்தில் காவடி ஆடும் பக்தர்கள்

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த பாம்புப் பரியாரியாரும் (விசக்கடிக்கு சிறந்த மருத்துவம் செய்ததால் ஏற்பட்ட பெயர்), எலும்பு முறிவுற்றவர்களை ஒட்டகப்புலத்திற்கு ஏற்றிச்செல்ல மாட்டுவண்டிக்காரரும் இருந்தார்கள்.

இப்படி சுயநிறைவுடனும் வளமாகவும் மக்கள் வாழ்ந்த கிராமம் வியாபாரிமூலை. இன்றும்கூட வியாபாரிமூலையான் என்று பெருமையாக என்று எங்களூரார் தங்களைச் சொல்லிக்கொள்வார்கள்.

பூகோளவியல் அமைவிடம்: 9° 49' 41.76" வடக்கு (அகலாங்கு), 80° 13' 13.16" கிழக்கு (நெட்டாங்கு)

Geographic coordinate: +9° 49' 41.76", +80° 13' 13.16" (9.828267,80.220322)

வல்லை முனியப்பர் கோவில்


யாழ் கடனீரேரியானது யாழ் தீபகற்பத்தினை வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் என மூன்று தனித்து நிற்கும் நிலப்பரப்புக்களாகப் பிரித்து வைத்திருக்கின்றது. பருத்தித்துறை-யாழ்ப்பாணம் (B71) வீதி ஊடறுத்துச் செல்லும் கடனீரேரிப் பகுதியான வல்லைவெளி வரட்சியான பரந்ததொரு வெளியாகும். அந்த வெளியின் மத்தியில் இருக்கும் ஒரேயொரு பெருமரமும் அதன் கீழிருக்கும் வல்லை முனியப்பர் கோவிலும் அவ்வழியால் செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கும். பண்டைய காலந்தொட்டு அவ்வழியால் பயணம் செய்பவர்கள் வல்லை முனியப்பரிடம் தங்கள் பயணம் இனிதே நிறைவேற வேண்டுவதற்குத் தவறுவதேயில்லை.

பூகோளவியல் அமைவிடம்: 9° 47' 4.89" வடக்கு (அகலாங்கு), 80° 8' 12.74" கிழக்கு (நெட்டாங்கு)

Sunday, 6 December 2009

நல்லூர்க் கந்தசாமி கோவில், யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தின் சிறப்புமிக்க ஆலயங்களில் நல்லூர்க் கந்தசாமி கோவில் தனித்துவமானது. காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களினால் அழிக்கப்பட்டபோதும் பக்தர்களின் அழியாத பக்தியினால் மீளக் கட்டியெளுப்பப்பட்டு சீரும் சிறப்புமாக பரிபாலிக்கப்பட்டு வரும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவங்கள் மிகவும் பிரபலமானவை. அழகிற்கும் செல்வச்செழிப்பிற்கும் சான்றாக விளங்கும் 25 நாள் உற்சவங்களினால் நல்லைக் கந்தன் அலங்காரக்கந்தன் என்றும் அறியப்படுகிறான்.

நல்லூர்க் கந்தசாமி கோவில் முகப்புத்தோற்றம்

நிமிட நேரங்கூட காலந்தவறாது நடக்கும் ஆலயத்தின் பூசைகளும் எளியோரையும் சமமாக நடத்தும் ஒரு ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கும் அர்ச்சனை பற்றுச்சீட்டுகளும் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் மேலும் சிலவாகும்.

பூகோளவியல் அமைவிடம்: 9° 40' 28.29" வடக்கு (அகலாங்கு), 80° 1' 47.16" கிழக்கு (நெட்டாங்கு)

Geographic coordinate: +9° 40' 28.29", +80° 1' 47.16" (9.674524, 80.029767)

Friday, 4 December 2009

சங்கிலியன் மன்னனின் அரண்மனை, நல்லூர்

மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலான வரலாறுடைய யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி சங்கிலி குமாரன் என்று அறியப்படும் எட்டாம் செகராசசேகரன் போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களினால் 1619ஆம் ஆண்டு கொல்லப்பட்டதுடன் முற்றுப்பெற்றது. யாழ்ப்பாண இராச்சியத்தியன் சான்றுகளாக இப்பொழுது எஞ்சியிருப்பவை நல்லூர் - சங்கிலித்தோப்பு குறிச்சியில் எஞ்சியிருக்கும் அரண்மனை வாயிலும், மந்திரி மனையும், மன்னன் சங்கிலியனின் சிலையுமே. இவற்றில் அரண்மனை வாயிலும், மந்திரி மனையும் எந்தவித பராமரிப்புகளும் இன்றி அழிவடைந்து கொண்டிருக்கின்றன.

சங்கிலியன் மன்னனின் அரண்மனை வாயில்

மந்திரி மனை

வல்லிபுர ஆழ்வார் கோவில், பருத்தித்துறை

வல்லிபுர ஆழ்வார் கோவில் ஈழத்தின் பிரபலமான இந்து ஆலயங்களில் ஒன்று. பருத்தித்துறையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தென்கிழக்காக வடமராட்சி கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை வழியில் நெய்தல் பாங்கான இடத்தில் விசாலமான நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் சக்கரமே திருமாலின் சின்னமாக வழிபடப்படுவதனால் சக்கரத்தாழ்வார் என்றும் அறியப்படுகின்றார். யாழ்ப்பணத்தில் இலட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் திருவிழாக்களில் ஒன்றாக வல்லிபுர ஆழ்வார் கோவில் உற்சவம் விளங்குகின்றது. குறிப்பாக தேர் மற்றும் கடல் தீர்த்தம் என்பவை பல்வேறு இடங்களிலிருந்தும் பக்தர்களை ஒன்றுகூட வைக்கும்.

வல்லிபுர ஆழ்வார் கோவிலின் இராஜகோபுரம்

ஆலயம் அமைந்திருக்கும் சூழலில் காணப்படும் நாமக்குளம் (திருமண் எடுக்கப்படும் இடம்), அரிய கிளைகளுடன் கூடிய கற்பகதருக்கள் என்பவை இந்த ஆலயத்தின் தனிச்சிறப்புக்களில்சிலவாகும்.

கிளைகளுடன் கற்பகதருக்கள்

வாரத்தில் ஞாயிற்றுகிழமை பூசைகள் விசேசமாக கருதப்படுவதனால் வல்லிபுர ஆழ்வாரின் பக்தர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஞாயிற்றுகிழமைகளில் மாமிசம் உண்பதை தவிர்ப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆவணி ஞாயிறுகள் விசேசமானவை.

பூகோளவியல் அமைவிடம்: 9° 47' 21.88" வடக்கு (அகலாங்கு), 80° 14' 32.78" கிழக்கு (நெட்டாங்கு)

Geographic coordinate: +9° 47' 21.88", +80° 14' 32.78" (9.78941,80.242439)

நயினை நாகபூஷணி அம்மன் கோவில், நயினாதீவு

தீவில் காலடி வைத்ததும் கிடைக்கும் ஆலய தரிசனம்


ஆலயத்தின் முகப்புத்தோற்றம்

ஆலயத்தின் பக்கவாட்டுத் தோற்றம்

அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருவுருவங்களில் ஒரு தொகுதி

பூகோளவியல் அமைவிடம்: 9° 37' 8.76" வடக்கு (அகலாங்கு), 79° 46' 27.31" கிழக்கு (நெட்டாங்கு)

Geographic coordinate: +9° 37' 8.76", +79° 46' 27.31" (9.619100, 79.774254)

Thursday, 3 December 2009

தீவகம், யாழ்ப்பாணம்

யாழ் தீபகற்பத்திற்கு மேற்காக பாக்கு நீரிணையில் அமைந்துள்ள சிறு தீவுகள் கூட்டாக தீவகம் என்ற பொதுப்பெயரால் அறியப்படுகின்றன. காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு முற்பட்ட காலத்தில் மிகச்சிறந்த கடலோடிகளாக விளங்கிய தென்னாசியாவின் தமிழ் மன்னர்களும், வணிகர்களும் தங்கிச்செல்லும் இளைப்பாறும் தளங்களாக விளங்கிய இத்தீவுகள் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டன. இன்றும் உலகின் பல்வேறு இடங்களிலும் வணிகத்திலும், கல்வியிலும் மற்றும் அறிவுசார் தொழில்களிலும் சிறந்த விற்பன்னர்களாக விளங்கும் தீவக மக்கள் தங்கள் ஊரின் பெருமையை பறைசாற்றிக் கொன்டிருக்கிறார்கள். மேலும் கடின உழைப்பாளிகளான தீவக மக்கள் விவசாயத்திலும் சளைத்தர்கள்அல்ல.

பண்ணை வழி

தீவகத்தின் முக்கிய தீவுகளாக நெடுந்தீவு, வேலணை (ஊர்காவற்றுறையையும் உள்ளடக்கியது), புங்குடுதீவு, நயினாதீவு, காரைதீவு (காரைநகர்), மண்டைதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகியன கருதப்படுகின்றன. இத்தீவுகளில் மண்டைதீவு, வேலணை மற்றும் புங்குடுதீவு சாலைகளினால் இணைக்கப்பட்டுள்ளதுடன் பண்ணை வழியால் யாழ் நகரத்துடன் இணைந்துள்ளன. இவ்வாறே காரைதீவு பொன்னாலையில் கடல்வழிச் சாலையினால் யாழ் தீபகற்பத்துடன் இணைந்துள்ளது.

மண்டைதீவு

வேலணை

புங்குடுதீவு

இங்குள்ள புகைப்படங்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழையில் வயல்களில் நீர் நிரம்பியிருக்கும்போது எடுக்கப்பட்டன.

தட்டிவான்

கொடிகாமம், யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமான சிறிய நகரங்களில் ஒன்று. அதன் கேந்திர நிலையமும், யாழ்ப்பாணத்தின் தேங்காய் தேவைகளைப்பூர்த்தி செய்யும் தென்னந்தோட்டங்களும் கொடிகாமத்தின் முக்கியத்துவத்திற்கான காரணங்கள். புகையிரதம் ஓடிய காலத்தில் வடமராட்சியில் இருந்தவர்களுக்கு கொடிகாமந்தான் போக்குவரத்திற்கு வசதியான புகையிரத நிலையம். ஆக தென்பகுதிகளுக்கு பிரயாணம் செய்பவர்கள், தேங்காய் வியாபாரிகள், ஏனையோர் என்று பலரும் பயணிக்கும் பருத்தித்துறை- கொடிகாமம் (B68) வீதி முக்கியமான ஒரு வீதி. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தார் ஊற்றப்பட்டு, பின்னர் ஒரு சில சமயங்களில் மட்டும் குழிகள் நிரவப்பட்டு மழையில் அரித்துச் செல்லப்பட்டு, அந்த வீதி சந்திரமண்டலத்தை ஞாபகப்படுத்தும். உயரங்குறைந்த ஜப்பானிய தயாரிப்பு வாகனங்கள் அந்த வீதியால் செல்லமுடியாதோ என்று சந்தேகப்படும் ஒரு நிலை.

விண்வெளிக்கு முதலில் ராக்கெட் அனுப்பிய, முதலில் மனிதனை அனுப்பிய ரஷ்யா ஏன் முதலில் மனிதனை சந்திரனுக்கு அனுப்பவில்லை என்பதற்கு இப்படியும் ஒரு கதை உண்டு (உண்மையில் நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் இறங்கினாரா என்று சந்தேகப்படுவது வேறு கதை). சந்திரனுக்கு அமெரிக்கர்களுக்கு சிலநாட்கள் முன்னரேயே புறப்பட்ட ரஷ்யர்கள் பருத்தித்துறை-கொடிகாமம் வீதியைப்பார்த்துவிட்டு விண்கலத்தை திசைதிருப்பி மணற்காட்டில போய் இறங்கிவிட்டார்களாம். மரங்களில்லாத மணற்கும்பிகளுக்கு நடுவில் இருந்துகொண்டு அங்கிருந்த மணலை ஆராய்ச்சி செய்தார்களாம் (அதில்தான் மணற்காட்டு மணலில் சிலிக்கா செறிவு மிகவும் அதிகமாகவுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை). யாரோ பெர்மிட் இல்லாமல் முகமூடியெல்லாம் போட்டுக்கொண்டுவந்து வந்து களவாக மணல் அள்ளுறாங்கள் என்று நினைத்த பொலிஸ், ரஷ்யர்களைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டதாம். அந்த இடைவெளியில் அமெரிக்கர்கள் சந்திரனுக்குப் போய்விட்டார்களாம்.

இப்படிப்பட்ட பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையை பல தசாப்தங்களாக வழங்கிவரும் தட்டிவான்கள் தனித்துவமானவை. ஐம்பது வருடங்களிற்கு மேற்பட்ட வயது, இரும்பினாலான துருத்திக்கொண்டிருக்கும் முகப்பு, மரப்பலகைளால் செய்யப்பட்டு இரும்புச்சட்டங்களால் பிணைக்கப்பட்ட உடற்பகுதி, மரப்பலகைகளாலான ஆசனங்கள், 4 அடிக்கு மேற்பட்ட உயரமுடையவர்கள் எழுந்து நிமிர்ந்து நிற்க இயலாத தாழ்ந்த கூரை, எந்தக்கிடங்கையும் தாண்டக்கூடிய பெரியசிற்கள், கூரையில் வைக்கப்பட்டிருக்கும் மேலதிக சில்லு, கண்ணாடிகளற்ற திறந்த யன்னல்கள், காற்றினை அழுத்தி இயங்கும் ஒலியெழுப்பி (horn), அதனுடைய தனித்துவமான "பாம் பாம்" ஒலி, இயந்திர ஒலியும் மரத்தாலான உடலின் அதிர்வும் சேர்வதால் ஏற்படும் விசித்திர ஒலி என்று தட்டிவானின் தனித்துவ அடையாளங்கள் பல.

பருத்தித்துறை பழைய சந்தை வெளியில் தரித்து நிற்கும் ஒரு தட்டிவான்

சிலதசாப்தங்களுக்கு முன்பு பல பாதைகளிலும் போக்குவரத்துச் சேவையிலீடுபட்ட தட்டிவான்கள் வசதியான பேருந்து (பஸ்) மற்றும் சிற்றூர்தி (மினிபஸ்) சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பொதுமக்களால் கைவிடப்பட்டன. புதிய வசதிகளுடன் போட்டிபோட முடியாத தட்டிவான்களின் உரிமையாளர்கள் பலரும் அவற்றைக் கைவிடத்தொடங்கினர். இந்நிலையில் பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் நிலை காரணமாக போக்குவரத்துச் சேவையிலீடுபட பேருந்து மற்றும் சிற்றூர்தி உரிமையாளர்கள் ஆரம்பத்தில் தயங்கியதால் அந்த வீதியின் போக்குவரத்துச் சேவையை தட்டிவான்களின் உரிமையாளர்கள் கெட்டியாகப் பற்றிக்கொண்டனர். சிறிதுகாலத்தின் பின் போக்குவரத்துச் சேவையிலீடுபட முயன்ற சில சிற்றூர்திகளும் தட்டிவான் உரிமையாளர்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டன. ஆக அரிதான,பல காலங்களிலும் இயங்காத, அரசுப் பேருந்து சேவையைத் தவிர, பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவை என்பது, இன்றுவரை தட்டிவான்களின் ஏகபோகத்திலேயேயுள்ளது. போர்க்காலத்தில் டீசலுக்கு தடைவிதிக்கப்பட்ட போதும் கூட மண்ணெண்ணெய்யும் நல்லெண்ணெய்யும் கலந்த கலவையில் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஓட தட்டிவானின் எதையும் தாங்கும் இயந்திரம் ஒத்துழைத்தது.

பருத்தித்துறை பழைய சந்தை வெளியில் தரித்து நிற்கும் தட்டிவான்கள்

அதிகாலை நேரத்தில் பருத்தித்துறை பேருந்து நிலயத்திற்கு மந்திகை, துன்னாலை, நெல்லியடி போன்ற இடங்களிருந்து வரும் தட்டிவான்கள் அங்கிருந்தே தமது சேவையை ஆரம்பிக்கும். பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மட்டுமே அநேகமாக வாகனத்துள் உட்கார்ந்து பயணஞ்செய்வார்கள். "இளந்தாரிகள் (இளைஞர்கள்) எல்லாரும் பின்னால ஏறுங்கோ", "சாமான்களையெல்லாம் மேல போடுங்கோ", "அப்பு வந்து டிரைவருக்குப் பக்கத்தில இருங்கோவன்" என்று கொண்டக்டர் சத்தம்போட்டு பயணிகளை பொருத்தமான இடங்களில் இருத்துவார். கொண்டக்டர் "அண்ணை றைற்" சொல்ல, தட்டிவான் புறப்படும். தட்டிவான் மந்திகைச்சந்தியில் சிறிதுநேரம் நிறுத்தப்பட மந்திகை ஆசுப்பத்திரியில் (வைத்தியசாலையில்) தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்களும், பிள்ளைப்பேற்றிற்கு வந்து கைக்குழந்தைகளுடன் திரும்புபவர்களும், அவர்களின் உறவினர்களும் தலையணை, கூடைகள், பைகளுடன் ஏறிக்கொள்வார்கள். அவர்களுக்கு இருக்கைகளைக் கொடுத்துவிட்டு மற்றவர்கள் எழுந்துகொள்வார்கள். இளைஞர்கள் வாகனத்தில் பின்புறம் சங்கிலியில் தொங்கும் தட்டில் நின்று கூரையிலுள்ள இரும்புச்சட்டத்தைப் பிடித்தபடி புழுதியில் குளித்து வெயிலில் காய்ந்தபடி பயணிப்பார்கள். ஆனாலும் காற்றோட்டத்தால் வெய்யில் உறைப்பதில்லை. தட்டிவானிற்கு shock-absorber இருப்பதாகவே தெரிவதில்லை (உணர முடிவதில்லை). ஒவ்வொரு கிடங்கையும் வேகம் குறையாது துள்ளிக்குலுங்கி தட்டிவான் கடக்கும்போது பயணிகள் எல்லாரும் பிடைத்தெடுக்கப்படுவார்கள். ஆனாலும் யாருமே டிரைவரில் கோபப்படுவதில்லை. "டிறைவரண்ணை! அந்த சிவத்த கேற்றடியில கொஞ்சம் நிற்பாட்டிறியளே?" என்றால் அந்த வீட்டுவாசலில்கூட பயணியை இறக்கிவிடுவார்கள். வாடிக்கையாக பயணப்படும் தேங்காய் வியாபாரிகளும், நாவல்பழம் விற்கும் ஆச்சிகளும் வாகனத்தின் சத்தத்திற்கு மேலாக சத்தமாக குடும்பக்கதைகளை, ஊர்ப்புதினங்களை அலசிக்கொண்டிருக்க மற்றவர்கள் சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருப்பார்கள். வழியில் சுட்டிபுரம் அம்மன் கோவில் வாசலில் தட்டிவான் நிறுத்தப்பட்டதும் கொண்டக்டர் ஓடிச்சென்று கற்பூரம் கொழுத்தி உண்டியலில் காசுபோட்டுவிட்டு வருவார். பயணிகள் சிலரும் இறங்கிப்போய் கும்பிட்டுவிட்டு வருவார்கள். இறங்க முடியாத சிலர் செல்பவர்களிடம் உண்டியலில் போடக் காசு அல்லது கற்பூரம் கொடுத்துவிடுவார்கள். கோயிலுக்கு போனவர்கள் வரும்போது கையில் திருநீறு கொண்டுவந்து எல்லோருக்கும் நீட்டுவார்கள். எல்லோரும் மனதாரக்கும்பிட்டு திருநீறு பூசியதும் தட்டிவான் புறப்படும். கொடிகாமத்தைத் தட்டிவான் அடைந்ததும் பயணிகள் இறங்கிக்கொள்ள, சிலர் டிரைவருக்கும் கொண்டக்டருக்கும் "போயிட்டு வாறன்" சொல்லிவிட்டுப் போவார்கள். தட்டிவானை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு டிரைவரும் கொண்டக்டரும் தேத்தண்ணிக்கடையிற்குப் (தேநீர்க்கடை) போய்விடுவார்கள்.

கொடிகாமம் சந்தியில் தரித்து நிற்கும் ஒரு தட்டிவான்

கொடிகாமத்தில், பருத்தித்துறை செல்லும் பயணிகள் வந்து ஏறிக்கொள்ள, தேங்காய் வியாபாரிகள் மூட்டைகளைக் கொண்டுவந்து கூரையில் ஏற்றுவார்கள். வெற்றிலை சப்பியபடி டிரைவர் வந்து ஏறிக்கொள்வார். கொண்டக்ரர் "அண்ணை றைற்" சொன்னதும் மீண்டும் தட்டிவான் உறுமலுடன் பயணத்தை ஆரம்பிக்கும். அதே கலகலப்பு, துள்ளல் குலுக்கல்களுடன் பயணம் தொடரும்.

எத்தனையோ வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேரூந்துகளில் பயணஞ்செய்பவர்கள் கூட அந்தளவு சுவாரசியமான, மகிழ்ச்சியான, உயிரோட்டமான பயணத்தை மனதார அநுபவிப்பார்களா என்பது சந்தேகமே.

(இந்தப்பதிவை நீண்ட நாட்களுக்கு முன்னர் "மரத்தடி" குழுவில் சமர்ப்பித்திருந்தேன்)