Tuesday 7 August 2012

சமையலில் பயன்படும் வாசனைத் திரவியங்கள்

வெளிநாடொன்றில் தமிழ்ச்சங்கமொன்றின் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது நண்பர்கள் இருவருக்கிடையில் நடந்த உரையாடல் இது:
நண்பர் 1: "வறுத்த வேர்க்கடலை இருந்தா நன்னாயிருக்குமே. போறப்போ கொறிச்சுண்டு போயிரலாம்."
நண்பர் 2: "எங்களிண்ட ஊரில கச்சானைத்தான் வறுத்துச் சாப்பிடுறனாங்கள். நான் கோயிலுக்குப் போறதே அதுக்குத்தான். அதென்ன வேர்க்கடலை?"
நண்பர் 1: "ஓ, அதுவா, பிரவுண் கலரில கோதிருக்கும். உடைச்சாக்க உள்ளார ரண்ணு மூணு பருப்பிருக்கும்."
நண்பர் 2: "கச்சானும் அப்பிடித்தான் இருக்கும்"   
இப்படி பேச்சு வழக்குகளிற்கிடையே மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டிய நிலை சிலவேளைகளில் ஏற்படுவதுண்டு.

அதைவிட இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் வரும்  நிகழ்ச்சிகளில் ஆங்கில மற்றும் இந்தி மொழிக் கலப்பு சர்வ சாதாரணம். அவர்கள் எங்கே தமிழில் பேசுகிறார்கள் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். பெரும்பாலான நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்  ஆங்கில இந்திச் சொற்களுக்கு தமிழ்போன்ற உச்சரிப்புகளையும், தமிழ் வேற்றுமையுருபுகளையும் கொடுத்து, தமிழினுள் உள்வாங்கி, தமிழ்மொழி வளர இடையறாது பாடுபடுகிறார்கள்.  


தொலைக்காட்சியில் சமையல் பற்றிய நிகழ்ச்சியொன்றைப் பார்த்துக் கொண்டிருந்த உறவினரொருவர், "இவங்கள் சொல்லுற சாமான்களை வாங்க இந்தியாதான்  போவேணும் போலயிருக்கு" என்றார். எந்தப் பொருட்களை வாங்கவென்று கேட்டால் "தனியா, லவங்கம், ..." என்று பட்டியல் வந்தது.  

அவரைப் போன்றவர்களுக்காகத் தொகுத்ததே இந்தக்குறிப்பு. முதலில் தமிழ்ப் பெயரும் (இலங்கை / இந்திய தமிழ் பேச்சு வழக்குகளில்), அடுத்ததாக ஆங்கிலப் பெயரும், அடைப்புக் குறிகளினுள் இந்திப்பெயர்களும் தரப்பட்டுள்ளன. 

விதைகளும், பழங்களும் - Seeds and Fruits
  • கடுகு - Mustard seeds (Rai / Sarson)
  • சின்னச்சீரகம் / சீரகம் - Cumin seed (Jeera)
  • பெருஞ்சீரகம் / சோம்பு - Fennel seed (Saunf/Sanchal)
  • வெந்தயம் - Fenugreek seeds (Methi)
  • கொத்தமல்லி / தனியா - Coriander seeds (Dhaniya)
  • மிளகு - Black Pepper Corns / Pepper (Mirchi)
  • ஏலம் / ஏலக்காய் - Cardamom / Green Cardamom (Elaichi)
  • கறுப்பு ஏலக்காய் - Black Cardamom (Kali Elaichi)
  • ஓமம் - Carom seeds / Bishop's Weed seeds (Ajwain)
  • கருஞ்சீரகம் - Black Cumin seed
    • தமிழில் கருஞ்சீரகம் எனும் பொதுப் பெயரால் இரண்டு முற்றிலும் வேறுபட்ட தாவரங்களின் விதைகள் அழைக்கப்படுகின்றன. அவையாவன:  Nigella sativa மற்றும்  Bunium persicum (Syah Jeera).
  • சாதிக்காய் – Nutmeg (Jaiphal)
  • சாதிப்பூ - Mace (Javitri)
    • உண்மையில்  இதுவொரு பூவல்ல, மாறாக பழத்தினுள் சாதிக்காய் விதையைச் சூழ்ந்திருக்கும் உறைபோன்ற மெல்லிய பகுதியே சாதிப்பூ என அழைக்கப்படுகின்றது.
  • எள் - Sesame seeds (Til)
  • கசகசா - Basil seeds (Sabja / Tukmaria)
  • அன்னாசி மொக்கு / மகம்பூ - Star anise (Chakra phool)
  • செத்தல் மிளகாய் - Dried Chilli / Red chili pepper (Lal Mirchi)
  • பச்சை மிளகாய் - Green chili pepper (Hari Mirch)
  • சாம்பார் மிளகாய் - Sambar Chilli
  • புளி / பழப்புளி  - Tamarind (Imli)
  • எலுமிச்சை / தேசிக்காய் - Lime (Nimbu)
  • கொறுக்காய்ப்புளி - Malabar tamarind / Brindall berry (Kudampuli)
  • நெல்லிக்காய் / முழுநெல்லிக்காய் - Indian gooseberry (Amla)
  • கடுக்காய் - Terminalia chebula (Harad / hime)
  • மாதுளம் விதை - Pomegranate seed (Anardana)
  • சீமைச் சோம்பு - Caraway Seed (Siya zira)
  • திப்பிலி - Long pepper (Pippali)
  • வால்மிளகு - Cubeb
  • அசம்டவோமன் - Celery seed (Ajmud)

பூக்களும் மொட்டுக்களும் - Flowers and Buds
  • கிராம்பு / லவங்கம் - Clove (Lavang)
  • குங்குமப்பூ - Saffron (Kesar)

பட்டைகளும் வேர்களும் கிழங்குகளும் - Barks, Roots and Rhizomes

  • கறுவா / இலவங்கப்பட்டை / பட்டை - Cinnamon (Dalchini)
  • இஞ்சி - Ginger (Adrak)
  • வோ்க்கம்பு / வோ்க்கொம்பு / சுக்கு - Dried ginger (Sonth)
  • மஞ்சள் - Turmeric (Haldi)
  • வசம்பு - Sweet Flag
  • அதிமதுரம் - Licorice (Jethimadh, Valmi)

பிசின்களும் பாசிகளும் - Resins and Lichens
  • பெருங்காயம் - Asafoetida (Hing)
  • கல்பசி - lichen (Pathar Ka Phool)

இலை வகைகள் - Leaves
  • கருவேப்பிலை - Curry leaf / Sweet neem leaf (Kadipatta)
  • கொத்தமல்லி கீரை - Coriander leaf (Dhaniya)
  • வெந்தய கீரை  - Fenugreek leaf (Kasoori Methi leaves)
  • புதினா இலை - Mint leaf (Pudina)
  • (பட்டை) - Bay leaf (Tej Patta)

பூண்டு வகைகள் - Bulbs
  • உள்ளி / வெள்ளைப் பூண்டு / பூண்டு – Garlic (Lahsun)
  • சின்ன வெங்காயம் / ஈருள்ளி (கன்னடம்) - Baby Onion, Red Onion, Shallot
    • சின்ன வெங்காயத்தில் பல வகைகள் உள்ளன.
    • யாழ்ப்பாணத்தில் பயிரிடப்படும் வகைகள்: வல்லாரை 60, வல்லாரை 90, வேதாளம், யாழ்ப்பாண உள்ளூர் வகை.
  • பெரிய வெங்காயம் / பம்பாய்  வெங்காயம் - Big onions, Red/purple Onion
    • பெரிய வெங்காயத்தில் பல வகைகள் உள்ளன.

பருப்பு வகைகள் - Nut Varieties
  • முந்திரி - Cashew nut
  • பாதாம் - Almond
  • வேர்க்கடலை / நிலக்கடலை / கச்சான் / மணிலாக்கொட்டை / மல்லாக்கொட்டை- Peanuts

தூள் வகைகள் - Powder Varieties
  • வறுத்த கறித்தூள் - Roasted Curry powder (Sri Lankan)
  • கறித்தூள் - Curry powder 
  • மிளகாய்த் தூள் – Chilli powder
  • குடை மிளகாய்த்தூள் - Paprika powder
  • மாங்காய்த்தூள் - Sour mango powder (Aamchur)
  • கரம் மசாலா - Garam Masala
    • மிளகு, கிராம்பு, கறுவா, சின்னச்சீரகம், கருஞ்சீரகம், பச்சை ஏலக்காய் மற்றும்  கறுப்பு ஏலக்காய் ஆகியவற்றின் கலவை வறுக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.  

ஏனையவை - Others
  • உப்பு / கறியுப்பு - Salt (Namak)
  • வெல்லம் / சர்க்கரை (இலங்கை பேச்சுவழக்கில்) / கருப்பட்டி - Jaggery (Gur)
  • பன்னீர் -     Rose water (Gulab Jal)
  • வினாகிரி - Vineger (Sirka)

Sunday 11 March 2012

இலகுவில் கவிஞர் ஆகுவது எப்படி?

கவிஞராகும் ஆசை உங்களுக்கு உள்ளதா?

பலவிதமான பாடவிதானங்களுக்கு துரித கற்பித்தல் வகுப்புக்கள் (crash courses) நடைபெறும் இக்காலத்தில், துரித கதியில் கவிஞராகுவதட்கான வழிமுறையொன்று இங்கே பகிரப்படுகின்றது. இது இணையத்தில் முகப்புத்தகத்திலும் (Facebook) வலைப்பூக்களிலும் (Blog) உலவும் சில கவிஞர்களிடமிருந்து சமீப காலங்களில் கற்றுக்கொண்ட பாடத்தின் சிறு குறிப்பு (short notes).

இதோ இலகுவில் கவிஞராகுவதட்கான படிமுறைகள்:

முகப்புத்தகத்தில் கவிஞர், கவிஞன், கவிதாயினி போன்ற அடைமொழிகளை உங்கள் பெயருக்கு முன்னால்/பின்னால் இணைத்துக்கொள்ளுங்கள். ஊர்ப்பெயர், காரணப்பெயர், ஏதாவதொரு ஆகுபெயர் போன்றவற்றைக் கொண்டு புனைபெயர் அல்லது அடைமொழி வைத்துக்கொள்வது இன்னமும் சிறப்பானது.

இன்னமும் கவிதை எழுதாமல் கவிஞர் என்று சொல்லிக்கொள்ளக் கூச்சமா? உங்கள் கூச்சத்தினைத் தூர வீசுங்கள். ஏனென்றால் நீங்களும் சுலபமாக கவிஞராகிவிடலாம்.

இதோ அதற்கான படிமுறைகள். தவறாமல் பின்பற்றவும்.

1. இணையவுலகில் பிரபலமானவர்களுடன் முகப்புத்தகத்தில் நண்பராகச் சேர்ந்து கொள்ளுங்கள்.

2. அத்துடன், உங்களைப் போன்று கவிஞராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுடனும் முகப்புத்தக நண்பராகிக்கொள்ளுங்கள். 'கவி', 'கவிஞர்' போன்ற சொற்களை முகப்புத்தக நண்பர்தேடலில் தேடினால் சில நூற்றுக்கணக்கான 'கவிஞர்கள்' சிக்க வாய்ப்புண்டு. அவர்களின் கவிதைகளிட்கெல்லாம் 'ஆகா அற்புதம்', 'பிரமாதம்', 'இதுவல்லவோ கவிதை' என்று கம்பன்கூட நாணும் வகையில் தவறாமல் பின்னூட்டமிட்டு உங்களிட்கான வருங்கால விமர்சகர்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

3. காதல், சாதல், போன்ற வார்த்தைகளுடன் இன்னமும் சில தமிழ் அல்லது தமிழ்போன்ற சொற்களைத் தட்டச்சு செய்துகொள்ளவும். எழுத்துப்பிழைகள் இருந்தாலும் கண்டுகொள்ளத் தேவையில்லை . மேலும் அச்சொற்கள் அகராதிகளிலோ அல்லது நிகண்டுகளிலோ இருக்கவேண்டுமென்ற அவசியமுமில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒத்த ஒலியமைப்பு உள்ள சொற்கள் சிலவாவது இருக்குமாறு பார்த்துக்கொள்வது சிறப்பு.

4. ஒவ்வொரு சொற்களுக்கிடையிலும் அல்லது சொற்றொடர்களுக்கிடையிலும் ஐந்து முதல் பத்து வரையிலான முற்றுப்புள்ளிகளையிட்டு (உதவி: ............ ஐ 'CTRL + C' மூலம் நகலெடுத்துக் கொள்ளலாம்), அவ்வப்போது 'உள்ளிடு' (Enter) விசையை ஒருமுறை அல்லது இருமுறை அழுத்துங்கள். இப்போது கவிதை தயார்.

ஒரு ஹைக்கூ கவிதை வேண்டுமென்றால் 'உள்ளிடு' (Enter) விசையை இருமுறை மட்டும் அழுத்துங்கள். புதுக்கவிதை வேண்டுமென்றால் 'உள்ளிடு' (Enter) விசையை சில தடவைகளாவது அழுத்த மறவாதீர்கள். அல்லது, மரபுக்கவிதை வேண்டுமென்றால் ஒத்த ஒலிநயம் கொண்ட சொற்களுக்குப் பின்னால் 'சுட்டி' (cursor) வருமாறு வைத்து 'உள்ளிடு' (Enter) விசையை அழுத்துங்கள்.

5. உங்களுக்குப் பிடித்த ஒரு சொல்லை அல்லது சில சொற்களை தலைப்பிட்கென தெரிந்தெடுக்கவும். கவிதைக்கான தலைப்பினைத் தெரிந்தெடுக்க முடியாவிட்டால் அவற்றை வாசகர் விருப்பத்திற்கே விட்டுவிடலாம்.

6. உங்கள் கவிதையின் தலைப்பிற்கு அல்லது உங்கள் கவிதையில் அதிகம் தோன்றும் சொல்லிற்குப் பொருத்தமாக அழகான புகைப்படம் அல்லது ஓவியம் ஒன்றை இணையத்தில் நகலெடுக்கவும். அவற்றிற்கு சொந்தக்காரர் உங்கள் நண்பர் கூட்டத்திலோ அல்லது அவர்களின் நண்பர்களாகவோ இல்லாதிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மற்றும்படி உரியவர் யாரென்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டாம். படங்களிட்கான காப்புரிமைகளைக் (copyrights) கண்டுகொள்ளத் தேவையில்லை. காதல் சம்பந்தமான தலைப்பென்றால் அழகிய நடிகையொருவளின் /நடிகனொருவனின் புகைப்படம் நன்றாயிருக்கும். (உதவி: கூகிளின் படங்களிட்கான தேடல் http://www.google.com/imghp?hl=en&tab=wi உரலில் உள்ளது.)

7. முகப்புத்தகத்தில் 'எனது கவிதைகள்' என்று ஒரு படத்தொகுப்பை உருவாக்கி அங்கே இணையத்தில் சுட்ட புகைப்படத்தினைப் பதிவேற்றி, அதன் தரவுகள் பகுதியில் உங்கள் கவிதையைப் பிரதி செய்யுங்கள். 'உங்கள்' புகைப்படத்தினைப் பிரசுரிக்கும்படியாக முகப்புத்தகத்திட்கு அறிவுறுத்துங்கள்.

இதோ! கவிஞராகிவிட்டீர்கள்!! பிரசுரித்தும்விட்டீர்கள்!!!

கொஞ்சம் பொறுங்கள்.... உங்கள் அற்புதமான கவிதை ஆயிரக்கணக்கான வாசகர்களைச் சென்றடைய வேண்டாமா?

8. முகப்புத்தகத்தில் பதிவேற்றிய அப்புகைப்படத்தில் உங்கள் நண்பர்கள் அனைவரையும் தவறாமல் 'பெயர்க்குறியீடு' (tag) செய்யுங்கள். மிக முக்கியமாக இணையவுலகில் பிரபலமானவர்களை 'பெயர்க்குறியீடு' (tag) செய்ய மறந்துவிடவேண்டாம்.

இப்போ உங்கள் கவிதை பெரும் எண்ணிக்கையிலான முகப்புத்தக வாசகர்களைச் சென்றடைந்திருக்கும். குறிப்பாக, பிரபலமானவர்களின் அபிமானிகளான ஆயிரக்கணக்கான வாசகர்கள் உங்கள் கவிதைகளை வாசிக்கும் பெரும்பேறு பெற்றிருப்பார்கள்.

யார் போற்றாவிடினும் உங்கள் நண்பர்கள் குழாமிலுள்ள கவிஞர்கள் நிச்சயம் உங்கள் கவிதையினை மெச்சுவார்கள். மெச்சவேண்டும்.

இப்படிக்கு,
கவிதை இரசனையில்லாதவன்.

பி.கு.: அப்படியே வலைப்பூவொன்றை ஆரம்பித்து உங்கள் கவிதைகளையும் சுட்ட படங்களையும் பதிவேற்றம் செய்து வாசகர் வட்டத்தினை இன்னமும் விரிவுபடுத்தலாம். பணவசதி இருக்குமென்றால் அச்சிட்டு வெளியிடுவதையும் பரிசீலிக்கலாம்.

Saturday 3 March 2012

"போதையனார் தேற்றம்" எனும் மாயை

சமீப நாட்களாக இணையத்தில் உலாவரும் தமிழின் பெருமைகளைப் பேசும் மின்னஞ்சல்களில்/பதிவுகளில் ஒன்று "போதையனார் தேற்றம்" பற்றியது. "போதையனார் தேற்றத்தின்" சிறப்பம்சம் வர்க்கமூலம்(√) இல்லாமலேயே செம்பக்கத்தினை/கர்ணத்தினை கணிக்க முடிகின்றது என நீளுகின்றது அத்தகவல். ஆனால், இங்கே தமிழ் மொழியின் மீதான பற்றினைப் பயன்படுத்தித் தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட தகவல் வழங்கப்படுகின்றது என்பதே உண்மை.

இந்த தகவலின் உண்மைத் தன்மையை அறிய கவனிக்கப்பட வேண்டியவை வருமாறு:
1. இங்கே கணிதவியலின் தர்க்க ரீதியிலான நிறுவுதல்கள் எதுவுமின்றி "தேற்றம்" என்று ஒன்று சொல்லப்படுகின்றது. அடிப்படையில் இங்கே குறிப்பிடப்படும் "தேற்றம்" எனும் சொல், அதன் அர்த்தத்தத்தினை இழந்து நிற்கின்றது.
2. உதாரணம் ஒன்றினை மட்டும் அடிப்படையாக வைத்து எந்த கணித சமன்பாட்டினையும்/கூற்றினையும் தேற்றம் என்று கூற முடியாது.
3. ஒரு தேற்றமானது சகல பொருத்தமான தரவுகளிட்கும் உண்மையாக இருத்தல் வேண்டும்.


இப்போது "போதையனார் தேற்றம்" என்ன சொல்ல விளைகின்றது என்று பார்ப்போம்.

"ஓடும் நீளம் தனை ஒரே எட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"

இதற்குக் கொடுக்கப்படும் பொழிப்புரை வருமாறு:
ஒரு செங்கோண முக்கோணத்தில்:
கர்ணம் = செம்பக்கம் (செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்திட்கு எதிர அமைந்துள்ள மிக நீண்ட நீளமுடைய பக்கம்)
ஓடும் நீளம் = செம்பக்கத்திட்கு அடுத்ததாக நீளமாயுள்ள பக்கம்
குன்றம் = முக்கோணத்தின் மிகச்சிறிய நீளமுடைய பக்கம்


தரப்பட்டுள்ள உதாரணத்தின்படி பக்க நீளங்கள் (3, 4, 5) கொண்ட செங்கோண முக்கோணத்தில்:
ஓடும் நீளம், a = 4
குன்றம், b = 3

"போதையனார் தேற்றத்தின்படி",
c= (a - a/8) + (b/2)
= 4-(4/8) + (3/2)
= 5
கர்ணம், c= 5.

இந்த ஒரு உதாரணத்தை (அல்லது இவ்விலக்கங்களின் மடங்குகளான (6,8,10), (9,12,15) போன்ற எண்கூட்டங்களை) மட்டும் அடிப்படையாகக்கொண்டு இதனைத் தேற்றமென்று கூறப்படுகின்றது.


இப்போது "போதையனார் தேற்றத்தின்" உண்மைத்தன்மையினை மற்றைய பைதகரஸ் எண் கூட்டங்களிட்கும் பார்ப்போம்.


(5,12,13)

ஓடும் நீளம், a = 12
குன்றம், b = 5

"போதையனார் தேற்றத்தின்படி"
c= (a - a/8) + (b/2)
= 12-(12/8) + (5/2)
= 13
கர்ணம், c= 13.

இந்த உதாரணமும் சரி வருகின்றது.


(7,24,25)

ஓடும் நீளம், a = 24
குன்றம், b = 7

"போதையனார் தேற்றத்தின்படி",
c= (a - a/8) + (b/2)
= 24-(24/8) + (7/2)
= 24.5
கர்ணம், c= 24.5 ≠ 25.

இங்கே "போதையனார் தேற்றம்" தடுமாற ஆரம்பிக்கின்றது.


(8,15,17)

ஓடும் நீளம், a = 15
குன்றம், b = 8

"போதையனார் தேற்றத்தின்படி",
c= (a - a/8) + (b/2)
= 15-(15/8) + (8/2)
= 17.125
கர்ணம், c= 17.125 ≠ 17.

இதற்கப்பால் எல்லாமே தப்பான முடிவுகள்தான். அதனைவிட கர்ணமானது ஓடும்நீளத்தினை விட சிறிதான இலக்கமாக வருவதும் குறிப்பிடத்தக்கது.


(9,40,41)
"போதையனார் தேற்றத்தின்படி",
கர்ணம், c= 39.5 ≠ 41 (அத்துடன் 39.5 < 40).


(11,60,61)
"போதையனார் தேற்றத்தின்படி",
கர்ணம், c= 58 ≠ 61 (அத்துடன் 58 < 60).


(12,35,37)
"போதையனார் தேற்றத்தின்படி",
கர்ணம், c= 36.625 ≠ 37.


(13,84,85)
"போதையனார் தேற்றத்தின்படி",
கர்ணம், c= 80 ≠ 85 (அத்துடன் 80 < 84).

இப்படியே (15,112,113), (16,63,65), (17,144,145), (19,180,181), (20,21,29), (20,99,101), (21,220,221), (23,264,265), ...... போன்ற இலக்கங்களுக்கும் தொடர்கின்றது துல்லியமற்ற முடிவுகள். ஆக மொத்தத்தில் போதையனார் கூறியது இரண்டு சந்தர்ப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் ஒரு கூற்று. "தேற்றம்" கிடையாது. ஆக மொத்தத்தில் ஒரு செம்பக்க முக்கோணத்திற்கு பைதகரஸ் தேற்றத்திற்கு பதிலாக "போதையனார் தேற்றத்தினை"ப் பயன்படுத்தினால் பெறப்படும் விடைகளானது மேற்குறிப்பிட்ட இரண்டு சந்தர்ப்பக்கங்கள் (3,4,5), (5,12,13) (அல்லது அவற்றின் மடங்குகள்) தவிர்ந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் துல்லியமற்ற முடிவுகளாகவே இருக்கும்.