Sunday, 24 November 2013

தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்ப்போம்

இணைய உலகமும், சமூக வலைத்தளங்களும் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்ட இந்நாட்களில், அறிவினை வளர்க்க வேண்டிய இணையம் பல உண்மைக்குப் புறம்பான அல்லது திரிவுபடுத்தப்பட்ட தகவல்கள் அல்லது  புரட்டுக்கள் (hoaxes) பரப்பப்படுவதற்கு முக்கிய காரணியாக மாறி வருகின்றது. பெரும்பாலும் மொழிப்பற்று, மற்றவர்கள்களுக்கும் அறிவினை பகிர விரும்புதல், மற்றவர்களுக்காக அனுதாபப்படுதல் போன்ற நற்பண்புகளே இவ்வாறான தவறான தகவல்கள் வேகமாகப் பரவுவதற்குக் காரணமாகிவிடுகின்றன என்பதுதான் வேதனையானது. குறிப்பாக முகப்புத்தகம், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள் போன்றவை இதற்கான ஊடகங்களாக செயற்படுகின்றன. சிலவேளைகளில் ஒரு சில பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்ற வெகுசனத் தொடர்பு ஊடகங்களும்கூட இப்படியான தகவல்களை அவற்றின் உண்மைத் தன்மையை ஆராயாது வெளியிடுவது வழமையாகிவிட்டது.

ஒரு விடையத்தைப்பற்றி தெரியாதிருப்பதைவிட, தவறான அல்லது திரிவுபடுத்தப்பட்ட தகவல்களை தெரிந்திருப்பதும், அவற்றினை நம்புவதும், அதன்படி நடப்பதும், அவற்றினையே சரியென்று வாதிடுவதும், பல வேளைகளில் முட்டாள்தனமாகவும், சில வேளைகளில் தமக்கோ மற்றவர்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்துவிடுகின்றது.  இன்னும் சிலவேளைகளில் அந்நபரின் தகுதியையே சந்தேகிக்கவும் வைத்துவிடுகிறது.

இப்படியான உண்மைக்குப் புறம்பான தகவல்களில் சில வகைகள்:

(1) ஆபத்துகளும் அவற்றிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளும் வழிமுறைகள் என்பதாகப் பரப்பப்படும் புரட்டுக்கள்:

உதாரணம் 1: 
மூலம்: இணைய நண்பர்கள்

மேலே வேதிப்பொருளுக்கும் கிருமிக்கும் வித்தியாசம் தெரியாத ஒருவரால் உருவாக்கப்பட்ட இவ்வதந்தியில் குறிப்பிடப்படும் 'வெள்ளி நைட்ரோ ஆக்சைட்டு' என்றொரு வேதிப்பொருளே கிடையாது.

உதாரணம் 2: தானியங்கி பணமெடுக்கும் இயந்திரங்களில் பணமெடுத்துக்கொண்டிருக்கும் போது திருடன் மிரட்டினால் இரகசிய குறியீட்டு இலக்கத்தினை கடைசி இலக்கத்திலிருந்து முதல் இலக்கம் என்ற வரிசையில் உள்ளிட்டால் காவல்துறை வந்து உங்களைக் காப்பாற்றும் என்பது போன்ற தகவல்.

உதாரணம் 3: கணினி வைரஸ் ஒன்றிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள் என்று மிரட்டி அதற்குப் பரிகாரமாக கணினி இயங்குவதற்கு அடிப்படைத் தேவையான System32  போன்ற கோப்பு ஒன்றினையே அகற்றச்சொல்லும் புரட்டு.

உதாரணம் 4: திரையரங்குகளின் ஆசனங்களில் எய்ட்ஸ் நோய்பரப்பும் ஊசிகள் வைக்கப்படுவதாக கிலிகொள்ள வைக்கும் புரட்டு.

(2) தமிழின்/தமிழனின் பெருமைகள் என்பதாகப் பரப்பப்படும்  புரட்டுக்கள்:

உதாரணம் 1: தமிழே உலகத்தில் முதல் மொழி எனும் காணொளி. அதற்கு 'இதோ ஒரு அதிர்ச்சிகரமான செய்தி' என்று தலைப்பு வேறு. அதிலே மொழி விற்பன்னர் என்று குறிப்பிடப்படும் அலெக்ஸ் கொலியர் (Alex Collier) என்பவர் தமிழைப்பற்றிக் கூறும் ஒற்றை வரி இடம்பெறும். இந்த நபரைப்பற்றி கூகிள் தேடுபொறி தரும் தகவல்களே போதும் இந்தத் தகவலின் நம்பகத்தன்மைக்கு. இப்புரட்டு கோட்-சூட் போட்டவன் சொல்வதெல்லாம் உண்மையென்று நம்பும் நம்மவர்களுக்காக தமிழ்த் தொலைக்காட்சியொன்றிலும் ஒளிபரப்பப்பட்டாதாக அறியப்படுகின்றது.

உதாரணம் 2:  "நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த திருநள்ளாறு சனி பகவான்" எனும் புரட்டு. "எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர் ஆனால் காரணம் புரியவில்லை. அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறன." இப்படி மக்களை முட்டாளாக்குவதற்கு நாசாவினையே துணைக்கிழுக்கும்  ஒரு புரட்டு.

(3) நண்பர்கள் அனைவருக்கும் தகவலைப் பரப்புவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்  அல்லது நன்மையொன்றினைப்  பெற்றுக்கொள்ளுங்கள் எனும் மின்னஞ்சல்களும் முகப்புத்தகச் சுவர் பதிவுகளும்.

உதாரணம் 1: காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவுங்கள், கோரமான புகைப்படங்களுடன் வரும் சாகவிருக்கும் ஒருவருக்கு உதவுங்கள் போன்ற மின்னஞ்சல்களும் முகப்புத்தகச் சுவர் பதிவுகளும். அதனைச் செய்யாவிடத்து உங்களுக்கு கல்நெஞ்சம் என்று சபிக்கப்படுவதுமுண்டு

உதாரணம் 2: மின்னஞ்சலை அல்லது முகப்புத்தகச் சுவர் பதிவினை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பினால் நிறுவனமொன்று இலவசமாய் பொருட்களைத் தரும், அல்லது நிவாரண நிதியொன்றிற்குப் பங்களிப்பினை வழங்கும்.

அண்மையில் எனது முகப்புத்தாக சுவரில் நண்பர் ஒருவரால் பதிவேற்றப்பட்ட தகவல் இது:

"சற்றுமுன் ஆங்கிலத்தில் நான் படித்த செய்தி..இங்கே உங்களுக்காக தமிழில் மொழிப் பெயர்த்துள்ளேன்.. படிக்கும்போதே என் கண்களை கலங்க வைத்த செய்தியும் கூட

14 வயது சிறுவன் தன் மாற்றந் தந்தையால் 6 முறை சுடப்பட்டு இருக்கிறான். காரணம் அவன் தன் தாயின் இரண்டாவது கணவனால் கற்பழிக்கப்பட இருந்த தன் தங்கையினை காப்பாற்ற போராடியதே. அச்சிறுமிக்கு சிறு காயங்கள்கூட இல்லாமல் காப்பாற்றிய சிறுவனின் துணிச்சலை பாராட்ட வார்த்தைகள் இல்லை

அச்சமயம் அவன் அம்மா வேலைக்கு சென்றிந்தார். தற்சமயம் அச்சிறுவன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறான். மருந்துவர்கள் அவனுக்கு அதிக செலவு வைக்கும் ஓர் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவன் பிழைக்க முடியும் என்று கூறி இருக்கிறார்கள். அவனின் ஏழை தாயாரால் அவ்வளவு பணம் திரட்ட முடியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறார்.

முகநூல் நிறுவனம், இச்செய்தியை ஒரு முறை பதிவு செய்வதற்கு 45 சென்ட்ஸ் தர முன் வந்துள்ளது. ஆகவே நாம் அனைவரும் இதை பகிர்வதின் மூலம் அச்சிறுவனுக்கு உதவ முடியும். அது மட்டும் அல்லாமல் இதன் மூலம் அந்த வீர சிறுவனுக்கு ஓர் ‪#‎சல்யுட்‬ போடலாம். தயவு செய்து இப்பதிவினை அதிகமாக பகிரவும். ‪#‎மனிதனாய்‬ இருக்க பணம் தேவை இல்லை.

இச்சிறுவன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்! (thank to tamil.......)"


யாரோ ஒருத்தர் பத்திரிகைச் செய்தியை வாசித்தாராம், அதை தமிழில் மொழிபெயர்த்தாராம், முகப்புத்தகத்திலும் போட்டாராம். உடனே முகப்புத்தக நிறுவனம் ஒவ்வொரு விருப்பு வாக்கிற்கும் 45 சதம் கொடுக்கிறதாம். எப்படியெல்லாம் கதைவிடுகிறார்கள். அதைவிடக் கொடுமை இதுவெல்லாம் உண்மையாய் இருக்குமோ என்று கொஞ்சம்கூட சிந்திக்காமல் இதுபோன்ற புரட்டுக்களை அப்படியே மற்றையவர்களின் முகப்புத்தக சுவர்களிலும் பதிக்கும் நபர்கள் நிறையவே இருப்பது.  

(4) தவறான புரிதல்களினால்  அல்லது தகுதியற்றவர்கள் அறிவியல் சார்ந்த செய்தியாசிரியர்களாய் இருப்பதால்  வெளியாகும் உண்மைக்குப் புறம்பான செய்திகள்:

உதாரணம் 1:  "வானில் நிகழும் அற்புத நிகழ்வு! இன்று நிலவு நீல நிறத்துடன் தோன்றும்!" (தினமணி செய்தி, 31-12-2012) என்று ஓர் செய்தி வெளியானது. உண்மை யாதெனில், ஒரு நாட்காட்டி மாதத்தினுள் இரண்டாவது முறையாகவரும் பௌர்ணமியினை நீல நிலா (Blue moon) என்பது ஆங்கில வழக்கம். அதனைத் தவறாகப் புரிந்துகொண்டது மட்டுமில்லாது 'வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை ஆகியவை காரணமாக இந்த நிறம் ஏற்படும் என்று இந்திய வானியல் சங்கத்தின் இயக்குநர் என். ஸ்ரீரகுநந்தன் குமார் தெரிவித்துள்ளார்' என்று அந்த முற்றிலும் தவறான செய்திக்கு ஒரு ஆதாரத்தையும்(!!!) முன்வைத்தது தினமணி.

உதாரணம் 2: "காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு - கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு" (தினமலர் செய்தி, 14-01-2013) என்றது இன்னோர் செய்தி. விஞ்ஞானத்தின்  அடிப்படையில் நிரந்திர நீடித்த இயக்கம் (Perpetual motion) வகையைச் சேரும் இந்த "கண்டுபிடிப்பு" ஒரு மாயையே. நிரந்திர நீடித்த இயக்கமென்பதே இயலாதவொன்று என்று சந்தேகத்திற்கிடமின்றி அறியப்பட்டுள்ளது. அப்படியிருக்க அதனைப் பயன்படுத்தி மின்சக்தியினை உற்பத்திசெய்தல் என்பது கற்பனையின் உச்சம். அதனைப் புரிந்துகொள்ளாது இம்முயற்சிக்கு பண உதவிகள் செய்யுமாறு வேறு சொல்கிறது அச்செய்தி. அச்செய்தியில் குறிப்பிட்டிருப்பதுபோல், இப்படியான நிரந்திர நீடித்த இயக்கம் வகையைச் சேர்ந்த ஒரு வடிவமைப்பிற்கு இந்திய மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனம்  காப்புரிமை வழங்கியிருப்பது உண்மையாயின் அந்நிறுவனம் இன்னமும் கற்காலத்திலேயே இருக்கின்றது என்று கூறலாம்.

(5) புகைப்பட "ஆதாரங்களுடன்" வரும் புரட்டுக்கள்

உதாரணம் 1: போடோஷோப் (Photoshop) போன்ற கணினி மென்பொருட்களால் உருவாக்கப்பட்ட அல்லது திரிபு செய்யப்பட்ட புகைப்படங்களை அல்லது திரைப்படங்களுக்காக உருவாக்கப்பட்ட உருவங்களின் புகைப்படங்களை இணைத்து வரும் 'புகுஷிமா கதிர்வீச்சினால் உருவான இராட்சத ஆமை' போன்ற புரட்டுக்கள். 

மூலம்: இணைய நண்பர்கள்

மேலே தரப்பட்டவை இணையத்தில் நான் கண்ட அல்லது எனது மின்னஞ்சல்/முகப்புத்தகத்திற்கு வந்து சேர்ந்த நூற்றுக்கணக்கான புரட்டுக்களில் சிலவாகும்.

இவற்றை தவிர்ப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரிடமிருந்து பெறும் தகவல்களை நண்பர்களுடன் பகிர்வதாயின் அவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்த்தபின்னரேயே பகிர்வோம் என உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றிற்கு உதவியாக www.hoax-slayer.com போன்ற இணையத்தளங்களை பயன்படுத்தலாம்.


எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
                    - திருவள்ளுவர்