Monday 1 February 2010

தொலைந்துபோன நாட்கள்

பருத்தித்துறைச் சந்தை சதுரமான நாற்சார் கட்டிடத்தில இயங்கிய காலம்....

நாற்சார் கட்டடத்தினுள் நடுவில காய்கறிச் சந்தையும், உட்புறமா சுத்திவர பலசரக்குச் சாமான்கள் விக்கிற சில்லறைக்கடைகளும், வெளிப்பக்கத்தில மற்றக் கடைகளும், சுத்திவர மூண்டு பக்கமும் விசாலமான ஒரு வழி தார் ரோட்டுகளும், நாலாவது பக்கத்தில பஸ்-தரிப்பிடமும் , மீண்டும் சுத்திவர கடைகளும், வங்கிகளும் , ஒதுக்கமா மீன்சந்தையும் எண்டு சுத்தமான, அழகான, சிறிய நகரம் பருத்தித்துறை. அப்பவெல்லாம் தென்பகுதியிலயிருந்து வாற சிங்களவர்கள் பருத்தித்துறையைப் பார்த்துப் பொறாமைப்படுவாங்கள்.

பருத்தித்துறையில இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடற்கரையோரமான வீதியால் 751 ஆம் இலக்க பஸ்களும், வடமராட்சியை ஊடறுத்து 750 ஆம் இலக்க பஸ்களும் எண்டு 10 நிமிசத்திற்கொரு பஸ் வெளிக்கிடும். இன்னும் யாழ்ப்பாணத்திற்குள்ளேயே தாளையடி, காங்கேசன்துறை, சாவகச்சேரி என்றும், வெளியே வவுனியா, கொழும்பு, திருகோணமலை என்றும் பஸ்சுகள் போகும். கொடிகாமத்திற்கு மட்டும் தட்டிவான்கள் போகும்.

பருத்தித்துறையில இருந்து காங்கேசன்துறைப் பக்கமாய் போகிற கரையோரப்பாதையில பஸ்ஸில போனால் துறைமுகம், ஹாட்லிக்கல்லூரி, வாடிவீடு, மெதடிஸ்ற் பெண்கள் உயர் பாடசாலை, சுப்பர்மடம், தெணி அம்மன் (எரிஞ்ச அம்மன்) கோவிலடிச் சந்தி, வியாபாரிமூலைச்சந்தி, திக்கம், பொலிகண்டி, ஊரணி, நெடியகாடு, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு என்று கடற்காற்றையும், ஆங்காங்கே கருவாட்டு வாசத்தையும் சுவாசித்துக்கொண்டு போகலாம்.

போற வழியில, பருத்தித்துறையிலயிருந்து ஒரு மைல் தூரத்தில, வியாபாரிமூலைச்சந்தி தாண்டி மடத்தடியில இறங்கி பின்னால நடந்து வியாபாரிமூலைக்குள்ள நுழைந்தால் முதல்ல வாறது தெருவின் இரண்டு பக்கங்களிலையும் கண்ணுக்கு எட்டிற தூரம்வரை இருக்கிற தோட்டங்கள்தான். மெதடிஸ்ற் பெண்கள் உயர் பாடசாலைக்குப் பின்பக்கமாய் ஆலடிப்பிள்ளையார் கோவில்லயிருந்து பொலிகண்டி வரைக்கும் நீண்டிருக்கும் அந்தத் தோட்டங்கள். கடற்கரையோரமாய் மீனவர் குடியிருப்புக்கள், கடலிலிருந்து சுமார் 30 அடி தூரத்துக்குள் தெரு, சிறு தென்னந்தோப்புகள், தோட்டவெளி, குடியிருப்புகள் எண்ட பொதுவான வடமராட்சி வடக்கின்ர நில அமைப்பில தோட்டவெளியும் அடுத்திருக்கிற குடியிருப்புகளும் கொண்டதா இருந்தது எங்கட ஊர், வியாபாரிமூலை.

ஊரில அநேகம் ஆக்களுக்கு தோட்டநிலங்களில் பங்கிருக்கும். எங்களுக்கும் அப்படி கொஞ்சம் நிலங்கள் இருந்திச்சு. அப்பா சின்னவயசில தோட்டஞ்செய்த நிலங்களும் அம்மாவின் வழி வந்த நிலங்களும் தான் அதெல்லாம். தோட்டவெளியின்ர ஓரமாய் இருந்த எங்கட வீட்டின்ட பின்பக்கத்தில இருக்கிற கிணத்தடிக் கட்டில ஏறிநிண்டு பார்த்தா தோட்டம் தாண்டிக் கடலும் தெரியும்.

எனக்குத் தெரிஞ்ச காலத்திலயிருந்து எங்கட தோட்டநிலங்கள குத்தகைக்கு குடுத்திருந்தாங்க. கன காலமா எங்கட தோட்டத்தில பயிர்செய்தது வேலுப்பிள்ளையப்பா. குத்தகையாக அவரிடம் காசு வாங்கினதில்லை. தோட்டத்தில விளையுற காய்கறிகள அவ்வப்போது தருவார். எங்கட வீட்டிற்கு பக்கத்தால போகிற குச்சொழுங்கையாலதான் அவர் தோட்டத்திற்கு போய்வாறவர். ஒல்லியான சாரம் கட்டின உடம்பு, தோளில துண்டு, சைக்கிள் கரியரில கடகம், மண்வெட்டியென்று அவரது தோற்றம் எங்கட ஊர் சராசரி தோட்டக்காரரை நினைவுபடுத்தும்.

சனிக்கிழமை காலையில 'தம்பி... தம்பி' என்று வேலுப்பிள்ளையப்பா குரல்கேட்டால் ஏதாவது காய்கறி வந்திருக்கெண்டு அர்த்தம். எட்டி மதிலுக்கு மேலால முளைக்கீரைக் கட்டோ அல்லது கைப்பெட்டிக்குள்ள வைத்து அவர் கொடுக்கும் காய்கறிகளையோ வாங்குவம். அப்பதான் பிடுங்கிக் கொண்டுவந்த அந்தக் காய்கறிகளின்ர சுவை... ம்ம்ம்ம்... நீண்டகாலமாய்ப் போச்சு அப்படிச்சாப்பிட்டு.

அந்தக் காய்கறிகளெல்லாம் அவர் விரும்பின போது தந்ததுகள்... ஆனால் ஒன்றை மட்டும் அவர் மறக்காமல், மாறாமல் தருவார். நாங்களும் கட்டாயமா அவரிடம் எதிர்பார்த்ததும் அதுதான். அது... மாரி முடிந்து பயிர் வைக்கிறபோது வருகிற விளைச்சலில் ஒரு பூசணிப்பழம். அதுமட்டும் மதிலுக்கு மேலால வராமல் கேற்றால வரும். வந்து குசினுக்குள்ள காத்தோட்டமா, எலிகடிக்காத இடமாய்ப் பாத்து பாதுகாப்பா குந்திவிடும். எப்படியும் ஒரு 2 மாசத்திற்கு அது அப்படியே இருக்கும். விட்டால் 6 மாசத்திற்கு இருக்குமெண்டு அப்பா சொல்லுவார்.

எங்கட அப்பப்பாவின்ர திவசத்தன்றைக்குத்தான் அது வெட்டுப்படும். நான் நினைத்துக்கொள்ளுவன் தோட்டஞ்செய்த அப்பப்பாவிற்கு பூசணிக்காய் என்றால் ஆசையாக்கும் எண்டு.... அப்பாவிற்கு 10 வயசா இருக்கிற போதே அப்பப்பா காலமாகிவிட்டதால, அப்பப்பாவின்ர முகம் எப்படி இருந்திருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. போட்டோ கூட இல்ல. அதுக்குப்பிறகு இருந்த கொஞ்ச நிலத்தில தோட்டஞ்செய்து கஸ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா வாழ்க்கையில முன்னேறி வந்தது அப்பாவின்ர குடும்பம். அப்பவெல்லாம் பெரியமாமி, சின்னமாமி, பெரியப்பா, நாங்கள், சித்தப்பா எண்டு எல்லாரும் ஊரிலேயே இருந்தோம். அப்பம்மா பிள்ளைகளின்ர ஐந்து வீடுகளுக்கும் கோயில்களுக்கும் என்று ஊரை வலம்வந்து கொண்டிருப்பா.

எனக்குத்தெரிய பெரியப்பா, அப்பா, சித்தப்பா எல்லாரும் அரச உத்தியோகம். அதனால ஆடி மாசம் வரும் அப்பப்பாவின்ர திவசத்தை அதை அண்டியதாய் ஒரு ஞாயிற்றுக்கிழமைதான் செய்வாங்க. அதற்கு முதல் ஒரு நாள் சந்தித்து யார்வீட்டில திவசம் செய்யிறது என்று முடிவெடுப்பாங்க. திவசத்திற்கு முதல் நாள் பூசணிப்பழம் திவசம் செய்யிற வீட்டிற்குப் போய்விடும். பந்திப்பாய், பாத்திரங்கள் என்று வேற சாமான்களும் கொண்டுபோவாங்க. பின்னேரம் பொம்பிளைகள் எல்லாரும் சேர்ந்து என்ன சமைப்பதெண்டு அலசுவினம். பிறகு பயித்தங்காய் உடைப்பது, வெங்காயம் உரிப்பதெண்டு ஆயத்தங்கள் நடக்கும். அண்ணாக்கள், அக்காக்கள் எல்லாரும் சேர்ந்து விளையாடுவாங்க. எனக்குத்தான் என்னுடைய வயசில யாரும் இருப்பதில்ல. மற்றப்பிள்ளைகளோட ஒப்பிட்டா நான் சின்னப்பையன். அதனால அம்மா இருக்கிற இடத்தில தான் அதிகம் இருப்பன்.

திவசத்தன்றைக்கு காலையில எல்லாரும் வந்துவிடுவாங்கள். சமையல் வேலை தொடங்கிவிடும். எனக்கு முக்கியமான விசயம் அந்த பூசணிப்பழத்தை வெட்டுவதை பாக்கவேண்டும் எண்டதுதான். அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. எனக்குத்தேவை அந்தப் பூசணியின்ர விதைகள். வெட்டினதும் பூசணிவிதைகளை எடுத்து ஒரு கடதாசில போட்டு எனக்குத் தருவாங்கள். எடுத்துக்கொண்டுபோய் எங்காவது வெயிலில வைத்துவிடுவன். அதை வெய்யிலில காயவைத்து காயவைத்து நகத்தால உரித்து உள்ளேயிருக்கிற பருப்பை சாப்பிடுறதில எனக்கு அலாதி விருப்பம். உங்களில யாராவது அப்படிச் சாப்பிட்டிருக்கிறியளோ?

எனக்கு வாழையில வெட்டுறது, கடைக்கு ஓடிப்போய் ஏதாவது வாங்கிக்கொண்டுவாறது எண்டு சின்னச்சின்ன வேலைகள் வந்துகொண்டேயிருக்கும்.

சமையல் முடிஞ்சு குத்துவிளக்கேத்தி தலைவாழையிலையில படைத்து தேவாரம் பாடச்சொல்லி கேட்பாங்கள்... அண்ணாக்கள் அக்காக்கள் எல்லாரும் ஒளித்துவிடுவாங்கள்... அகப்பட்டாலும் போனமுறை நான் பாடினனான் இந்த முறை வேறையாரையும் பாடச்சொல்லுங்கோ என்று நழுவிவிடுவாங்கள்... பந்திப்பாய் விரித்து, இலை போட்டு, பொம்பிளைகள் பரிமாற, ஆம்பிளைகளும் பிள்ளைகளும் சாப்பிட்டு , பிறகு பொம்பிளைகள் சாப்பிட்டு, வெளியே வந்து விறாந்தைகளில இருந்து கதையளப்பாங்கள்...

இப்படி ஒவ்வொரு வருசமும்.... ஆனா இறுதியா 1986ல... அதற்குப்பிறகு?

1985 ஏப்ரலில் எங்களூருக்குள் வந்த போரின் தாக்கம்... 1986 இன் பின் மோசமாய்ப் போக இடம்பெயர்வுகளும் அகதி வாழ்க்கைகளும் பிரிவுகளுமாய் சிதறிப்போய்விட்டன உறவுகள்... பல தலைமுறைகள் வாழ்ந்த ஊரில அப்பாவின்ர சகோதரங்களில் யாரும் இல்லை...

கடைசியா 97ல ஆளுக்கொரு ட்ரவலிங் பாக்கோடை வீட்டைப் பூட்டிவிட்டு வெளிக்கிட்டனாங்கள்.
பல வருசங்களுக்குப் பிறகு ஊர் போனபோது எங்கட வீட்டில யாரோ... எங்களை யாரெண்டு அவங்களுக்குத் தெரியாது... தென்மராட்சியிலயிருந்து அகதியாய் வந்தவங்களாம். நாங்கள் ஊர் திரும்புவதென்றால் வீட்டைவிட்டு எழும்புவாங்களாம். அவங்களைக் குறைசொல்ல ஏலாது.... நாங்களும் அவங்களை எழும்பச்சொல்லேல்லை.

பருத்தித்துறைச் சந்தை?
முதல்ல நெருப்பு வைச்சாங்கள்... பிறகு குண்டுகள்...
இப்பவெல்லாம் இருந்த இடமே தெரியாது. பழைய சந்தையெண்டுதான் அந்த இடத்தைச் சொல்லுறாங்க. ஒரு திறந்தவெளிதான் அங்க இருக்கு. பெரிய கட்டடங்கள் இருந்த அடையாளங்களே இல்லை. அத்திவாரங்களைக்கூட காணேலாது.

இப்படி தொலைஞ்சு போனதுகள் ஏராளம்.....

ஆனால் நினைவுகள் மட்டும் எஞ்சியிருக்கு.

(2004இல் எழுதப்பட்டது)