Thursday, 3 December 2009

தட்டிவான்

கொடிகாமம், யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமான சிறிய நகரங்களில் ஒன்று. அதன் கேந்திர நிலையமும், யாழ்ப்பாணத்தின் தேங்காய் தேவைகளைப்பூர்த்தி செய்யும் தென்னந்தோட்டங்களும் கொடிகாமத்தின் முக்கியத்துவத்திற்கான காரணங்கள். புகையிரதம் ஓடிய காலத்தில் வடமராட்சியில் இருந்தவர்களுக்கு கொடிகாமந்தான் போக்குவரத்திற்கு வசதியான புகையிரத நிலையம். ஆக தென்பகுதிகளுக்கு பிரயாணம் செய்பவர்கள், தேங்காய் வியாபாரிகள், ஏனையோர் என்று பலரும் பயணிக்கும் பருத்தித்துறை- கொடிகாமம் (B68) வீதி முக்கியமான ஒரு வீதி. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தார் ஊற்றப்பட்டு, பின்னர் ஒரு சில சமயங்களில் மட்டும் குழிகள் நிரவப்பட்டு மழையில் அரித்துச் செல்லப்பட்டு, அந்த வீதி சந்திரமண்டலத்தை ஞாபகப்படுத்தும். உயரங்குறைந்த ஜப்பானிய தயாரிப்பு வாகனங்கள் அந்த வீதியால் செல்லமுடியாதோ என்று சந்தேகப்படும் ஒரு நிலை.

விண்வெளிக்கு முதலில் ராக்கெட் அனுப்பிய, முதலில் மனிதனை அனுப்பிய ரஷ்யா ஏன் முதலில் மனிதனை சந்திரனுக்கு அனுப்பவில்லை என்பதற்கு இப்படியும் ஒரு கதை உண்டு (உண்மையில் நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் இறங்கினாரா என்று சந்தேகப்படுவது வேறு கதை). சந்திரனுக்கு அமெரிக்கர்களுக்கு சிலநாட்கள் முன்னரேயே புறப்பட்ட ரஷ்யர்கள் பருத்தித்துறை-கொடிகாமம் வீதியைப்பார்த்துவிட்டு விண்கலத்தை திசைதிருப்பி மணற்காட்டில போய் இறங்கிவிட்டார்களாம். மரங்களில்லாத மணற்கும்பிகளுக்கு நடுவில் இருந்துகொண்டு அங்கிருந்த மணலை ஆராய்ச்சி செய்தார்களாம் (அதில்தான் மணற்காட்டு மணலில் சிலிக்கா செறிவு மிகவும் அதிகமாகவுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை). யாரோ பெர்மிட் இல்லாமல் முகமூடியெல்லாம் போட்டுக்கொண்டுவந்து வந்து களவாக மணல் அள்ளுறாங்கள் என்று நினைத்த பொலிஸ், ரஷ்யர்களைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டதாம். அந்த இடைவெளியில் அமெரிக்கர்கள் சந்திரனுக்குப் போய்விட்டார்களாம்.

இப்படிப்பட்ட பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையை பல தசாப்தங்களாக வழங்கிவரும் தட்டிவான்கள் தனித்துவமானவை. ஐம்பது வருடங்களிற்கு மேற்பட்ட வயது, இரும்பினாலான துருத்திக்கொண்டிருக்கும் முகப்பு, மரப்பலகைளால் செய்யப்பட்டு இரும்புச்சட்டங்களால் பிணைக்கப்பட்ட உடற்பகுதி, மரப்பலகைகளாலான ஆசனங்கள், 4 அடிக்கு மேற்பட்ட உயரமுடையவர்கள் எழுந்து நிமிர்ந்து நிற்க இயலாத தாழ்ந்த கூரை, எந்தக்கிடங்கையும் தாண்டக்கூடிய பெரியசிற்கள், கூரையில் வைக்கப்பட்டிருக்கும் மேலதிக சில்லு, கண்ணாடிகளற்ற திறந்த யன்னல்கள், காற்றினை அழுத்தி இயங்கும் ஒலியெழுப்பி (horn), அதனுடைய தனித்துவமான "பாம் பாம்" ஒலி, இயந்திர ஒலியும் மரத்தாலான உடலின் அதிர்வும் சேர்வதால் ஏற்படும் விசித்திர ஒலி என்று தட்டிவானின் தனித்துவ அடையாளங்கள் பல.

பருத்தித்துறை பழைய சந்தை வெளியில் தரித்து நிற்கும் ஒரு தட்டிவான்

சிலதசாப்தங்களுக்கு முன்பு பல பாதைகளிலும் போக்குவரத்துச் சேவையிலீடுபட்ட தட்டிவான்கள் வசதியான பேருந்து (பஸ்) மற்றும் சிற்றூர்தி (மினிபஸ்) சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பொதுமக்களால் கைவிடப்பட்டன. புதிய வசதிகளுடன் போட்டிபோட முடியாத தட்டிவான்களின் உரிமையாளர்கள் பலரும் அவற்றைக் கைவிடத்தொடங்கினர். இந்நிலையில் பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் நிலை காரணமாக போக்குவரத்துச் சேவையிலீடுபட பேருந்து மற்றும் சிற்றூர்தி உரிமையாளர்கள் ஆரம்பத்தில் தயங்கியதால் அந்த வீதியின் போக்குவரத்துச் சேவையை தட்டிவான்களின் உரிமையாளர்கள் கெட்டியாகப் பற்றிக்கொண்டனர். சிறிதுகாலத்தின் பின் போக்குவரத்துச் சேவையிலீடுபட முயன்ற சில சிற்றூர்திகளும் தட்டிவான் உரிமையாளர்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டன. ஆக அரிதான,பல காலங்களிலும் இயங்காத, அரசுப் பேருந்து சேவையைத் தவிர, பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவை என்பது, இன்றுவரை தட்டிவான்களின் ஏகபோகத்திலேயேயுள்ளது. போர்க்காலத்தில் டீசலுக்கு தடைவிதிக்கப்பட்ட போதும் கூட மண்ணெண்ணெய்யும் நல்லெண்ணெய்யும் கலந்த கலவையில் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஓட தட்டிவானின் எதையும் தாங்கும் இயந்திரம் ஒத்துழைத்தது.

பருத்தித்துறை பழைய சந்தை வெளியில் தரித்து நிற்கும் தட்டிவான்கள்

அதிகாலை நேரத்தில் பருத்தித்துறை பேருந்து நிலயத்திற்கு மந்திகை, துன்னாலை, நெல்லியடி போன்ற இடங்களிருந்து வரும் தட்டிவான்கள் அங்கிருந்தே தமது சேவையை ஆரம்பிக்கும். பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மட்டுமே அநேகமாக வாகனத்துள் உட்கார்ந்து பயணஞ்செய்வார்கள். "இளந்தாரிகள் (இளைஞர்கள்) எல்லாரும் பின்னால ஏறுங்கோ", "சாமான்களையெல்லாம் மேல போடுங்கோ", "அப்பு வந்து டிரைவருக்குப் பக்கத்தில இருங்கோவன்" என்று கொண்டக்டர் சத்தம்போட்டு பயணிகளை பொருத்தமான இடங்களில் இருத்துவார். கொண்டக்டர் "அண்ணை றைற்" சொல்ல, தட்டிவான் புறப்படும். தட்டிவான் மந்திகைச்சந்தியில் சிறிதுநேரம் நிறுத்தப்பட மந்திகை ஆசுப்பத்திரியில் (வைத்தியசாலையில்) தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்களும், பிள்ளைப்பேற்றிற்கு வந்து கைக்குழந்தைகளுடன் திரும்புபவர்களும், அவர்களின் உறவினர்களும் தலையணை, கூடைகள், பைகளுடன் ஏறிக்கொள்வார்கள். அவர்களுக்கு இருக்கைகளைக் கொடுத்துவிட்டு மற்றவர்கள் எழுந்துகொள்வார்கள். இளைஞர்கள் வாகனத்தில் பின்புறம் சங்கிலியில் தொங்கும் தட்டில் நின்று கூரையிலுள்ள இரும்புச்சட்டத்தைப் பிடித்தபடி புழுதியில் குளித்து வெயிலில் காய்ந்தபடி பயணிப்பார்கள். ஆனாலும் காற்றோட்டத்தால் வெய்யில் உறைப்பதில்லை. தட்டிவானிற்கு shock-absorber இருப்பதாகவே தெரிவதில்லை (உணர முடிவதில்லை). ஒவ்வொரு கிடங்கையும் வேகம் குறையாது துள்ளிக்குலுங்கி தட்டிவான் கடக்கும்போது பயணிகள் எல்லாரும் பிடைத்தெடுக்கப்படுவார்கள். ஆனாலும் யாருமே டிரைவரில் கோபப்படுவதில்லை. "டிறைவரண்ணை! அந்த சிவத்த கேற்றடியில கொஞ்சம் நிற்பாட்டிறியளே?" என்றால் அந்த வீட்டுவாசலில்கூட பயணியை இறக்கிவிடுவார்கள். வாடிக்கையாக பயணப்படும் தேங்காய் வியாபாரிகளும், நாவல்பழம் விற்கும் ஆச்சிகளும் வாகனத்தின் சத்தத்திற்கு மேலாக சத்தமாக குடும்பக்கதைகளை, ஊர்ப்புதினங்களை அலசிக்கொண்டிருக்க மற்றவர்கள் சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருப்பார்கள். வழியில் சுட்டிபுரம் அம்மன் கோவில் வாசலில் தட்டிவான் நிறுத்தப்பட்டதும் கொண்டக்டர் ஓடிச்சென்று கற்பூரம் கொழுத்தி உண்டியலில் காசுபோட்டுவிட்டு வருவார். பயணிகள் சிலரும் இறங்கிப்போய் கும்பிட்டுவிட்டு வருவார்கள். இறங்க முடியாத சிலர் செல்பவர்களிடம் உண்டியலில் போடக் காசு அல்லது கற்பூரம் கொடுத்துவிடுவார்கள். கோயிலுக்கு போனவர்கள் வரும்போது கையில் திருநீறு கொண்டுவந்து எல்லோருக்கும் நீட்டுவார்கள். எல்லோரும் மனதாரக்கும்பிட்டு திருநீறு பூசியதும் தட்டிவான் புறப்படும். கொடிகாமத்தைத் தட்டிவான் அடைந்ததும் பயணிகள் இறங்கிக்கொள்ள, சிலர் டிரைவருக்கும் கொண்டக்டருக்கும் "போயிட்டு வாறன்" சொல்லிவிட்டுப் போவார்கள். தட்டிவானை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு டிரைவரும் கொண்டக்டரும் தேத்தண்ணிக்கடையிற்குப் (தேநீர்க்கடை) போய்விடுவார்கள்.

கொடிகாமம் சந்தியில் தரித்து நிற்கும் ஒரு தட்டிவான்

கொடிகாமத்தில், பருத்தித்துறை செல்லும் பயணிகள் வந்து ஏறிக்கொள்ள, தேங்காய் வியாபாரிகள் மூட்டைகளைக் கொண்டுவந்து கூரையில் ஏற்றுவார்கள். வெற்றிலை சப்பியபடி டிரைவர் வந்து ஏறிக்கொள்வார். கொண்டக்ரர் "அண்ணை றைற்" சொன்னதும் மீண்டும் தட்டிவான் உறுமலுடன் பயணத்தை ஆரம்பிக்கும். அதே கலகலப்பு, துள்ளல் குலுக்கல்களுடன் பயணம் தொடரும்.

எத்தனையோ வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேரூந்துகளில் பயணஞ்செய்பவர்கள் கூட அந்தளவு சுவாரசியமான, மகிழ்ச்சியான, உயிரோட்டமான பயணத்தை மனதார அநுபவிப்பார்களா என்பது சந்தேகமே.

(இந்தப்பதிவை நீண்ட நாட்களுக்கு முன்னர் "மரத்தடி" குழுவில் சமர்ப்பித்திருந்தேன்)

5 comments:

  1. அருமையான விளக்கம் அண்ணா, நான் தட்டிவானைப் பற்றி எழுத வேணுமெண்டு நினைச்சுப் போட்டு படங்கள் தேடிப் பாத்தா உங்கட பதிவு அம்பிட்டுது. இத விட விளக்கமா நான் எழுதேலாது. ரொம்ப நல்லா இருக்கு.
    இன்னும் நிறைய எழுதுங்கோ...

    ReplyDelete
  2. நன்றி "பால்குடி".

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. எழுத்துத் தர்மம் அறியாது பிறர் எழுதுவதைத் திருடிப் பிரசுரிப்பவர்கள் தமிழில் இப்பொழுது அதிகரித்து வருகிறார்கள். பிரசுரிக்குமுன் எழுதியவரின் அனுமதியைப் பெறாதுவிடுவதைக்கூட மன்னிக்கலாம். உரியவரின் பெயரை (நன்றி என்றுகூட) குறிப்பிடாது தமது ஆக்கம்போல் வெளியிடுபவர்களை என்னவென்று சொல்வது?

    அந்த வகையில் சில:
    http://kalaiyadi.org/?p=5762#comment-1574

    http://newjaffna.com/fullview.php?id=NzQ2OA==

    http://mydeartamil.blogspot.com.au/2011/06/blog-post.html

    http://jananthankumarasamy.blogspot.com.au/2011/12/blog-post_06.html

    ReplyDelete
  5. இணையத்திருடர்களில் மேலும் சிலர்... திருடியதும் போதாதென்று திருடிய புகைப்படங்களின் மீது தமது பெயரைப் பெரிதாகப் பொறிப்பவர்கள் இவர்கள்:

    http://newyarl.net/fullview.php?id=MjI5MA==

    http://www.nellandai.com/?p=8



    ReplyDelete