Wednesday 9 December 2009

நிலாவரைக் கிணறு, நவக்கிரி

சின்ன வயதில் நிலாவரைக் கிணற்றின் இதுவரை அறியப்படாத மிகப்பெரும் ஆழம் பற்றியும் அக்கிணற்றிலிருந்து சில கிலோமேட்டர் தூரம்வரை நீர்ப்பாசனம் செய்யப்படும் வாழைத்தோட்டங்கள் பற்றியும் கேள்விப்பட்டதிலிருந்து எங்களூரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் போகும்போதெல்லாம் நிலாவரைக் கிணறு இருக்கும் நவக்கிரி வழியாகப் போகும்படி பலமுறை நச்சச்சரித்திருக்கிறேன். அவ்வாறே பலமுறை போயுமிருக்கிறேன்.

முறையான சுற்றுச்சுவர்கள் இல்லாது பார்ப்பதற்கு பாழடைந்த கேணி போலிருக்கும் அந்தக்கிணற்றின் அடி கண்ணுக்குத் தெரியாது இருண்டு கிடக்கும். அதன் ஆழத்தை உணர்வதற்காகவேன்றே கையில் எடுத்துச் செல்லும் அலுமினியத்திலான 1,2,5 அல்லது 10 சத நாணயக்குற்றிகளை அக்கிணற்றினுள் போட்டுவிட்டு அவை ஆடியாடி நீண்ட நேரமாக அமிழ்ந்து கண்ணுக்குத்தெரியாது போவதைப் பார்த்து இரசிப்பது அலாதியான ஒரு அனுபவம்.

நிலாவரைக் கிணறு, நவக்கிரி

யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு நீர்வளமான நிலத்தடி நீரை தேக்கிநிற்கும் சுண்ணாம்புக்கல் பாறைத்தொடரில் உள்ள மிகப்பிரமாண்டமான கோறையின் மேற்பக்கத் துவாரமாகக் கருதப்படும் இக்கிணற்றின் ஆழத்தை ஆங்கிலேயர் காலத்தில் அளவிட எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன என்று கூறப்படுகின்றது. சோனார் (SONAR) போன்ற நவீன தொழினுட்பங்கள் மூலம் ஆழத்தை அளவிடுவதற்கான முயற்சிகள் இதுவரையும் எடுக்கப்படாததனால் "ஆழமறியாக் கிணறு" என்ற பெயரும் நிலா வரையான தூரத்தினை ஆழமாகக் கொண்ட கிணறு எனப்பொருள்படும் "நிலாவரைக் கிணறு" என்ற பெயரும் மிகப்பெரும் நீர்முதல் காரணமான "வற்றாத கிணறு" என்ற பெயரும் இன்றுவரை தொடர்கின்றன.

மேலும் இந்தகிணற்றின் அறியப்படாத ஆழத்தை மையமாகக்கொண்டு "நிலாவரைக் கிணற்றில் எலுமிச்சம் பழம் போட்டால் அது கீரிமலைக் கேணியில் வெளிவரும்" என்ற கட்டுக்கதை இன்றும் பேசப்படுகின்றது. சுண்ணாம்புக்கல் பாறைத்தொடரில் மேல் தேங்கிநிற்கும் நிலத்தடி நீரில் தொடர்பு இருப்பது சாத்தியமென்றாலும் எலுமிச்சம் பழம் நவக்கிரியிலிருந்து கீரிமலைக்கு செல்வது என்பது சாத்தியமற்ற ஒன்று. கீரிமலைக் கேணியில் பிதிர்க்கடனை முடிக்க வருபவர்கள் போட்டிருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தைப் பார்த்து அது நவக்கிரியிலிருந்து தானாக சுழியோடி வந்தது என்று யாரோ கிளப்பிவிட்ட புரளி இன்றுவரைதொடர்கிறது.

பிற்குறிப்பு:
இதேபோன்ற இன்னுமொரு கட்டுக்கதைதான் தம்பசிட்டியிலுள்ள மாயக்கைப் பிள்ளையார் கோவில் கிணற்றில் எலுமிச்சம் பழம் போட்டால் அது தொண்டைமானாற்றில் வெளிவரும் என்பதும். அந்தக்காலத்தில் மந்திர தந்திர வேலைகளைச் செய்பவர்கள் எல்லோரும் அதிகம் எலுமிச்சம் பழங்களைப் பயன்படுத்தியதால் எலுமிச்சம் பழத்திற்கு சுழியோடுதல் உட்பட நிறைய சக்திகள் இருக்கும் என்று நம்பியிருப்பார்களோ தெரியவில்லை.

1 comment:

  1. "ஒவ்வொரு அநியாயத்தின் போதும் உங்கள் உள்ளம் கொந்தளிக்குமாயின் நீங்களும் நானும் நண்பர்களே " என்ற முகப்புத்தகவலுடன் மற்றவர்களது ஆக்கத்தினை உரியவர்களின் அனுமதி பெறாமலும் உரியவர்களினை மறைத்தும் "நியாயமாக" வெளியிடும் வலையில் (http://www.marikumar.co.cc/2010/03/blog-post_3487.html) இந்தப் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

    ReplyDelete