எங்கட ஊர் இரண்டு சாப்பாட்டுச் சாமான்களுக்கு பேர்போனது. ஒண்டு பருத்துறை (பருத்தித்துறை) வடை, மற்றது ஓடக்கரை அப்பம்.
எங்கட ஊர் ஆக்கள் வெளியூரில இருக்கிற தங்களோட இனசனத்துக்கு அன்பை காட்டவேண்டுமெண்டால் ஏதாவது நொறுக்குத்தீனிதான் அனுப்புவாங்கள். அதனாலேயோ என்னவோ தெரியாது எங்கட ஊர் ஆக்கள் மாசக்கணக்கில வைச்சுச் சாப்பிடக்கூடிய நொறுக்குத்தீனிகள் செய்வதில கெட்டிக்காரர். பொரிவிளாங்காய், உழுத்தம்பணியாரம், பகோடா, முறுக்கு வகைகள் எண்டு எது செய்தாலும் ஒரு ஆறு மாசத்துக்காவது வைச்சுச் சாப்பிடக்கூடிய மாதிரிச் செய்வாங்க. அப்படிச் செய்வதில இன்னுமொண்டுதான் இந்தப் பருத்தித்துறை வடை.
அதில பருத்தித்துறை வடை கொஞ்சம் பிரபலமானது. முன்னரெல்லாம் எந்த ஊராக்களும் பருத்தித்துறைக்கு வந்தால் கேட்டு வாங்குவாங்கள். இப்பவெல்லாம் அதுக்கு கேள்வி கூடிவிட்டதால இலங்கைத் தமிழர் இருக்கிற இடங்களில எல்லாம் செய்யுறாங்கள். ஆனால் பெயர் மட்டும் அப்படியே நிலைச்சு விட்டது. இப்ப கூட பருத்தித்துறையில செய்ஞ்ச பருத்தித்துறை வடைக்கு எண்டு தனி மரியாதை இருக்கு. எங்கட ஊரில இருந்து உலகம் பூரா ஏற்றுமதியாகிக்கொண்டிருக்குது.
இதோ பருத்தித்துறை வடையின்ர அடிப்படையான சமையல் குறிப்பு...
தேவையான பொருட்கள்:
உழுத்தம் பருப்பு - 1 சுண்டு
கோதுமை மா - 1 சுண்டு
செத்தல்மிளகாய்ப்பொடி - 2 தே.க.
பெருஞ்சீரகம் - 1 தே.க.
உப்பு - அளவாக
கறிவேப்பிலை
எண்ணெய்
செய்முறை:
உழுந்தை இரண்டு மணிநேரம் ஊறவைச்சு, தோல்நீக்கி, சுத்தம் செய்து, கோதுமை மா, மிளகாய்ப்பொடி, பெருஞ்சீரகம், சின்னதா வெட்டின கறிவேப்பிலை எல்லாத்தையும் ஒண்டு சேத்து இறுக்கமாக கொஞ்சமா தண்ணி விட்டுக் குழைத்து மெல்லிசான சிறு வட்டங்களாகத் தட்டிப் பொன்னிறமாக பொரித்தெடுங்கோ.
சுவை கூட வேண்டுமெண்டால் சின்னவெங்காயத்தையும் சின்னஞ்சின்னனா வெட்டிப்போடலாம். ஆனால் அதிக காலம் வைச்சு எடுக்கேலாது.
பிற்குறிப்பு: உழுந்தை அரைப்பதில்லை.
Friday, 22 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
:o.. good one.. =).. why don't you add yer blog to tamilmanam..?
ReplyDeleteஇதைப்படித்த உடன் சாப்பிடவேண்டும் என்ற ஆசை மனதில் துளிர்கிறது...
ReplyDelete