Sunday, 11 March 2012

இலகுவில் கவிஞர் ஆகுவது எப்படி?

கவிஞராகும் ஆசை உங்களுக்கு உள்ளதா?

பலவிதமான பாடவிதானங்களுக்கு துரித கற்பித்தல் வகுப்புக்கள் (crash courses) நடைபெறும் இக்காலத்தில், துரித கதியில் கவிஞராகுவதட்கான வழிமுறையொன்று இங்கே பகிரப்படுகின்றது. இது இணையத்தில் முகப்புத்தகத்திலும் (Facebook) வலைப்பூக்களிலும் (Blog) உலவும் சில கவிஞர்களிடமிருந்து சமீப காலங்களில் கற்றுக்கொண்ட பாடத்தின் சிறு குறிப்பு (short notes).

இதோ இலகுவில் கவிஞராகுவதட்கான படிமுறைகள்:

முகப்புத்தகத்தில் கவிஞர், கவிஞன், கவிதாயினி போன்ற அடைமொழிகளை உங்கள் பெயருக்கு முன்னால்/பின்னால் இணைத்துக்கொள்ளுங்கள். ஊர்ப்பெயர், காரணப்பெயர், ஏதாவதொரு ஆகுபெயர் போன்றவற்றைக் கொண்டு புனைபெயர் அல்லது அடைமொழி வைத்துக்கொள்வது இன்னமும் சிறப்பானது.

இன்னமும் கவிதை எழுதாமல் கவிஞர் என்று சொல்லிக்கொள்ளக் கூச்சமா? உங்கள் கூச்சத்தினைத் தூர வீசுங்கள். ஏனென்றால் நீங்களும் சுலபமாக கவிஞராகிவிடலாம்.

இதோ அதற்கான படிமுறைகள். தவறாமல் பின்பற்றவும்.

1. இணையவுலகில் பிரபலமானவர்களுடன் முகப்புத்தகத்தில் நண்பராகச் சேர்ந்து கொள்ளுங்கள்.

2. அத்துடன், உங்களைப் போன்று கவிஞராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுடனும் முகப்புத்தக நண்பராகிக்கொள்ளுங்கள். 'கவி', 'கவிஞர்' போன்ற சொற்களை முகப்புத்தக நண்பர்தேடலில் தேடினால் சில நூற்றுக்கணக்கான 'கவிஞர்கள்' சிக்க வாய்ப்புண்டு. அவர்களின் கவிதைகளிட்கெல்லாம் 'ஆகா அற்புதம்', 'பிரமாதம்', 'இதுவல்லவோ கவிதை' என்று கம்பன்கூட நாணும் வகையில் தவறாமல் பின்னூட்டமிட்டு உங்களிட்கான வருங்கால விமர்சகர்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

3. காதல், சாதல், போன்ற வார்த்தைகளுடன் இன்னமும் சில தமிழ் அல்லது தமிழ்போன்ற சொற்களைத் தட்டச்சு செய்துகொள்ளவும். எழுத்துப்பிழைகள் இருந்தாலும் கண்டுகொள்ளத் தேவையில்லை . மேலும் அச்சொற்கள் அகராதிகளிலோ அல்லது நிகண்டுகளிலோ இருக்கவேண்டுமென்ற அவசியமுமில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒத்த ஒலியமைப்பு உள்ள சொற்கள் சிலவாவது இருக்குமாறு பார்த்துக்கொள்வது சிறப்பு.

4. ஒவ்வொரு சொற்களுக்கிடையிலும் அல்லது சொற்றொடர்களுக்கிடையிலும் ஐந்து முதல் பத்து வரையிலான முற்றுப்புள்ளிகளையிட்டு (உதவி: ............ ஐ 'CTRL + C' மூலம் நகலெடுத்துக் கொள்ளலாம்), அவ்வப்போது 'உள்ளிடு' (Enter) விசையை ஒருமுறை அல்லது இருமுறை அழுத்துங்கள். இப்போது கவிதை தயார்.

ஒரு ஹைக்கூ கவிதை வேண்டுமென்றால் 'உள்ளிடு' (Enter) விசையை இருமுறை மட்டும் அழுத்துங்கள். புதுக்கவிதை வேண்டுமென்றால் 'உள்ளிடு' (Enter) விசையை சில தடவைகளாவது அழுத்த மறவாதீர்கள். அல்லது, மரபுக்கவிதை வேண்டுமென்றால் ஒத்த ஒலிநயம் கொண்ட சொற்களுக்குப் பின்னால் 'சுட்டி' (cursor) வருமாறு வைத்து 'உள்ளிடு' (Enter) விசையை அழுத்துங்கள்.

5. உங்களுக்குப் பிடித்த ஒரு சொல்லை அல்லது சில சொற்களை தலைப்பிட்கென தெரிந்தெடுக்கவும். கவிதைக்கான தலைப்பினைத் தெரிந்தெடுக்க முடியாவிட்டால் அவற்றை வாசகர் விருப்பத்திற்கே விட்டுவிடலாம்.

6. உங்கள் கவிதையின் தலைப்பிற்கு அல்லது உங்கள் கவிதையில் அதிகம் தோன்றும் சொல்லிற்குப் பொருத்தமாக அழகான புகைப்படம் அல்லது ஓவியம் ஒன்றை இணையத்தில் நகலெடுக்கவும். அவற்றிற்கு சொந்தக்காரர் உங்கள் நண்பர் கூட்டத்திலோ அல்லது அவர்களின் நண்பர்களாகவோ இல்லாதிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மற்றும்படி உரியவர் யாரென்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டாம். படங்களிட்கான காப்புரிமைகளைக் (copyrights) கண்டுகொள்ளத் தேவையில்லை. காதல் சம்பந்தமான தலைப்பென்றால் அழகிய நடிகையொருவளின் /நடிகனொருவனின் புகைப்படம் நன்றாயிருக்கும். (உதவி: கூகிளின் படங்களிட்கான தேடல் http://www.google.com/imghp?hl=en&tab=wi உரலில் உள்ளது.)

7. முகப்புத்தகத்தில் 'எனது கவிதைகள்' என்று ஒரு படத்தொகுப்பை உருவாக்கி அங்கே இணையத்தில் சுட்ட புகைப்படத்தினைப் பதிவேற்றி, அதன் தரவுகள் பகுதியில் உங்கள் கவிதையைப் பிரதி செய்யுங்கள். 'உங்கள்' புகைப்படத்தினைப் பிரசுரிக்கும்படியாக முகப்புத்தகத்திட்கு அறிவுறுத்துங்கள்.

இதோ! கவிஞராகிவிட்டீர்கள்!! பிரசுரித்தும்விட்டீர்கள்!!!

கொஞ்சம் பொறுங்கள்.... உங்கள் அற்புதமான கவிதை ஆயிரக்கணக்கான வாசகர்களைச் சென்றடைய வேண்டாமா?

8. முகப்புத்தகத்தில் பதிவேற்றிய அப்புகைப்படத்தில் உங்கள் நண்பர்கள் அனைவரையும் தவறாமல் 'பெயர்க்குறியீடு' (tag) செய்யுங்கள். மிக முக்கியமாக இணையவுலகில் பிரபலமானவர்களை 'பெயர்க்குறியீடு' (tag) செய்ய மறந்துவிடவேண்டாம்.

இப்போ உங்கள் கவிதை பெரும் எண்ணிக்கையிலான முகப்புத்தக வாசகர்களைச் சென்றடைந்திருக்கும். குறிப்பாக, பிரபலமானவர்களின் அபிமானிகளான ஆயிரக்கணக்கான வாசகர்கள் உங்கள் கவிதைகளை வாசிக்கும் பெரும்பேறு பெற்றிருப்பார்கள்.

யார் போற்றாவிடினும் உங்கள் நண்பர்கள் குழாமிலுள்ள கவிஞர்கள் நிச்சயம் உங்கள் கவிதையினை மெச்சுவார்கள். மெச்சவேண்டும்.

இப்படிக்கு,
கவிதை இரசனையில்லாதவன்.

பி.கு.: அப்படியே வலைப்பூவொன்றை ஆரம்பித்து உங்கள் கவிதைகளையும் சுட்ட படங்களையும் பதிவேற்றம் செய்து வாசகர் வட்டத்தினை இன்னமும் விரிவுபடுத்தலாம். பணவசதி இருக்குமென்றால் அச்சிட்டு வெளியிடுவதையும் பரிசீலிக்கலாம்.

No comments:

Post a Comment